இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மன்னார் அமுதனின் அக்குரோணி என்ற கவிதை நூல் இது. இனிமையான குணங்கள் நிறைந்த ஒரு அழகிய இளைஞனின் மிக அழகான நூல் இது. அட்டை கண்ணைக் ஈர்க்கும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது.
இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதலாவது கவிதைத் தொகுதியான ‘விட்டு விடுதலை காண்’ சில காலங்களுக்கு முன் 2009ல் வெளிவந்தபோது நிறையப் பேசப்பட்டது. பலராலும் பாராட்டப்பட்டது. விமர்சனங்களுக்கும் ஆளானது.
இன்றைய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மன்னார் அமுதன் இருக்கிறார். மிகுந்த வீச்சுடன் படைப்புலகில் இயங்குபவராக இருக்கிறார். இவரது ஆக்கங்கள் வராத பத்திரிகை இருக்க முடியாது என்று சொல்லுமளவு அதிகம் எழுதுகிறார். ஜீவநதி, ஞானம், இருக்கிறம், படிகள், கலைமுகம், பூங்காவனம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகளைப் படிக்க முடிகிறது.
தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைளிலும் இவரது படைப்புகளைத் தரிசிக்க முடிகிறது. இலக்கியத்திற்காகவே வாழ்பவர் போல, அதுவே தனது உயிர் மூச்சுப்போல கவிதைகளைப் படைக்கிறார். இவ்வளவு வேகமாக எழுதும் வேறொருவரைக் காண்பது அரிது.
‘மன்னார் அமுதனின் பக்கங்கள்’ http://amuthan.wordpress.com/home என்பது இவரது வலைத் தளமாகும். அதற்குள் நுளைந்து பார்க்கும்போது இவரது படைப்பாளுமையின் பரந்த வெளியில் பயணிக்க முடிகிறது. கவிதை மட்டும் இவரது படைப்பு உலகு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனம், சமூக விமர்சனம் எனப் பல படைத்துள்ளார்.
இன்று நான் கூகுளில் சென்று கவிதைகள் பற்றி அறிய ஒரு தேடுதல் நடத்தியபோது எனது வலையில் சிக்கியவை பெரும்பாலும் இவரது கவிதைகள்தான். பல இலக்கியக் கட்டுரைகளிலும், இணையக் கருத்தாடல்களிலும் கூட இவரது பெயர் அதிகமாகச் சிக்கியது. இணைய இதழ்களிலும் இவரது பெயர் மிக அதிகமாக இடம் பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.
யாழ்தேவி, தமிழ்மணம், திரட்டி, சிறந்த தமிழ் பூக்கள், இலங்கை வலைப் பதிவாளர் திரட்டி, தமிழ்க் கணிமை, இன்ட்லி, தமிழ்வெளி, மென்தமிழ் போன்ற பல இணையத் திரட்டிகளில் இவரது படைப்புகள் வெளியாகின்றன. இவ்வாறாக இன்றைய இலக்கிய உலகில் அதிலும் முக்கியமாக இளம் எழுத்தாளர்களிடையே மிகவும் பிரபலமானவராகவும் வசீகரம் மிக்கவராகவும் திகழ்கிறார்.
இலக்கிய நிகழ்வுகளிலும் இவரது பெயர் அதிகமாக அடிபடுவதை பத்திரிகை, சஞ்சிகைகள் ஊடாகக் காண முடிகிறது. முக்கியமாக திருமறைக் கலாமன்ற பௌர்ணமி நிகழ்வுகளில் இவரது பங்களிப்பை அதிகம் காண்கிறோம். மன்னார் எழுத்தாளர் பேரவையின் முக்கிய அங்கத்தவராகவும் இருக்கிறார். அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளதாக அறிகிறேன்.
மன்னார் அமுதன் எனது நண்பன். மேடைக்காகப் பேசிய அலங்கார வார்த்தைகள் அல்ல. இந்த முதியவருக்கும் இளைஞனுக்கும் இடையில் நட்பு இருக்க முடியாது என்பீர்கள். ஆனாலும் நாம் நண்பர்கள்தான். முகப் புத்தக (Facebook) நண்பர்கள். எண்ணெட்டுத் திசையில் இருப்பவர்களை இணைக்கும் பாலமாக இன்று முகப் புத்தகம் இருக்கிறது. வயது வேறுபாடின்றி, பால் வேறுபாடின்றி பலரும் அதன் ஊடாக நட்புப் பேண முடிகிறது. ஈடுபாடுகளில் ஒற்றுமை உள்ள பலரும் அதனூடாக தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் மட்டுமின்றி நேரடியாக இலக்கியக் கூட்டங்கள் பலவற்றிலும் இவருடன் கலந்துரையாடியிருக்கிறேன்.
கவிதை என்பது ஒரு இனிய அனுபவம். எல்லாப் படைப்பிலக்கியங்கள் போலவே கவிதையும் படைப்பாளியின் கருத்தை அல்லது உணர்வை கற்பனை கலந்து வாசகனுக்குத் தருகிறது. அவனது மெல்லுணர்வுகளை மீட்டி உள்ளத்தில் இசைபோலத் தழுவச் செய்கிறது.
ஆனால் இவற்றிடையே வேறுபாடுகள் உண்டு. கவிதையில் சொல்லப்படுபவை வசன நடையில் அமையாது என்பது தெரிந்ததே. கவிதையில் கருத்துச் செறிவு இருக்கும். சுருக்கமாகவும் ஓசை அமைதியுடனும் இருக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட கவிதையில் கவித்துவம் இருக்க வேண்டும்.
ஒரு படைப்பில் கவித்துவம் இருக்கிறதா என எப்படி அறிவது. அது கட்டுக்குள் அகப்படாத, வார்த்தைகளுள் சிக்காத, அதியுயர் அனுபவம் என்றே சொல்லலாம். பூவின் நறுமணம் போலக் கண்களால் காண முடியாதது. நுகர மட்டுமே முடிவது. பூவின் மணம் எவ்வாறு மனத்தைப் புளங்காகிதப் படுத்துகிறதோ அவ்வாறே கவிதை, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் அதியுயர் அக நிறைவைத் தருவதாகும்.
உணர்வாலும் அனுபவத்தாலும் கவிஞனையும் வாசகனையும் இணைப்பது கவிதையின் சொற்களாலான பாலமாகும். இருவரும் இணையும் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கவித்துவம் உச்சங்களை எட்டும். அவ்வாறு இணையச் செய்யும் ஆற்றல் படைப்பாளியின் சொற்களுக்கு வேண்டும். இதனால்தான் படைப்பனுக்கு மட்டுமல்ல படிப்பவனுக்கும் கூட அது மனநிறைவைத் தரும்.
சிறுகதை போல கவிதை தமிழுக்கு புதிதாக அறிமுகமான இலக்கிய வடிவம் அல்ல என்பதை நாம் அறிவோம். கவிதையே எமது பாரம்பரியம். ஐம்பெரும் காப்பியங்களைக் கொண்டது தமிழ். அதற்கு மேலாக கம்பனும் வள்ளுவனும் அண்மையில் பாரதியும் அதற்கு உரம் ஊட்டினார்கள்.
பாரதி தமிழ்க் கவிதையின் போக்கையே மாற்றினான்.
“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க நவகவிதை.”
என இலகு தமிழில் எழுதினான். அதில் வசன கவிதையும் அடங்கும். அவனது வசன கவிதை பின் யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, நவீன கவிதை, புதுக் கவிதை எனப் பல பெயர்களைத் தாங்கி பரிணாமமடைந்து இன்றைய கவிதை ஆகிவிட்டது.
மஹாகவி, முருகையன், நீலாவண்ணன் போன்ற மூத்த ஆளுமைகளுக்குப் பிறகு, 80 களின் பின் ஈழத் தமிழ்க் கவிஞர்கள் வேறொரு பரிமாணத்தில் புதிய வீச்சைப் பாய்ச்சினார்கள். தமிழ் கூறு உலகெங்கும் எமது கவிதைகள் பேசப்பட்டன. போரும் அகதி வாழ்வும் எமது கவிதைகளின் பாடு பொருளாயிற்று.
இப்பொழுது போருக்குப் பின்னான வாழ்வு. வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு அமைதியாக ஓடுகிறது. நிறைய நூல்கள் வெளிவருகின்றன. பல இளைஞர்கள் கவிதைத்துறையில் இறங்கியுள்ளார்கள். எமது வாழ்வின் இன்றைய கோலங்கள் பலவும் எமது கவிதையில் பேசப்படுகின்றன.
மன்னார் அமுதனின் கவிதைகளும் அவ்வாறே நிகழ் வாழ்வைப் பேசுகின்றன. வெறும் கற்பனை வழி வந்த படைப்புகள் அல்ல. தன்னைச் சுற்றியுள்ளவற்றை அவதானிக்கிறார். உள்ளார்ந்த மனித நேயத்துடன் பார்க்கிறார். அவற்றினால் உணர்வூக்கம் பெறுகிறார். கவலையும், ஆனந்தமும், கோபமும், போன்ற பல்வேறு உணர்வுகள் அவரது மனதை அலைக்களிக்கக் கவிதை படைக்கிறார்.
இதனால்தான் இவரது படைப்புவெளி சமூக அக்கறை மிகுந்ததாக இருக்கிறது. அவரது கவிதைகள் எமது வாழ்வைப் பிரதிபலிக்கினறன. கடுமையான சொல் அலங்காரம் கிடையாது. இலகுவான தமிழில் எழுதுகிறார். புதிரான உவமைகளும், விளங்காத படிமங்களும் அவரிடம் இல்லை. இதனால் எனக்குப் புரிகிறது. சாதாரண மக்களுக்கும் புரிகிறது. எல்லோருக்குமே புரியும்படி எழுகிறார். புரியாமல் எழுதினால்தான் கவிதை என்ற சிறைக்குள் அவர் அகப்படாது இருப்பது மகிழ்வைத் தருகிறது.
புரியும்படி எழுதினால்தான் மக்களுக்குப் புரியும். சமூகஅக்கறையுள்ள படைப்பாளியால் அவ்வாறுதான் எழுத முடியும்.
உதாரணத்திற்குப் பாருங்கள். சாதீயத்திற்கு எதிரான குரல் கொடுக்கிறார்.
“..குளிப்பதற்கும் கும்பிடவும்
தனியிடங்களா? நீரைக்
குவளையிலே குடிப்பதற்கு
இருமுறைகளா?..”
விழிம்பு நிலை மனிதர்களின் துயர் செறிந்த வாழ்வை ‘அவளும் அவர்களும் என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். பிச்சைக்காரியைக் கூட விட்டுவிடாத கயவர்களின் கயமை வெளிப்படுகிறது.
“..குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிளிந்த உடைகளுக்குள்
எதையோ தின்று கொண்டிருப்பான்…”
அவரது கவிதையில் அரசியலும் இருக்கிறது. அரசியல் என்பது கட்சி அரசியல் அல்ல. மொழி சார்ந்த, இனம் சார்ந்த அரசியல். ‘நாம் தமிழர், எமது மொழி நீண்ட பாரம்பரியம் கொண்டது. நாம் தலை நிமிர்ந்து வாழவேண்டும். என நாம் எல்லோரும் நாடுவதையே அவரும் நாடுகிறார்.
அதிகாரத்துக்கு எதிரான அவரது கவிதைக் குரல் இவ்வாறு ஒலிக்கிறது.
“..ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில்
அங்கம் தடவாது…”
புதுக் கவிதை, மரபுக் கவிதை என்ற இரண்டு வகைக் கவிதைகளையும் அவரது படைப்புகளில் காண முடிகிறது. பொதுவாக தமிழ் மொழியின் பெருமை, தமிழர் வாழ்வு, தமிழ்த் தேசியம் போன்ற கருவுடைய படைப்புகள் மரபு வழிக் கவிதைகளாக அமைந்திருப்பதை காண முடிகிறது.
‘வரம் தா தேவி’ என்பது நூலின் முகப்புக் கவிதையாக அமைத்திருப்பதிலிருந்தே அவரது தாய்மொழிப் பற்றை நாம் விளங்கிக் கொள்ளலாம். இவற்றைத் தவிர ‘தமிழாய் தமிழுக்காய்’, தமிழே எம் உடலே’, எனப் பல கவிதைகள் தமிழின் புகழ் பாடுகின்றன.
தமிழின் மீதுள்ள பற்றுப் போலவே தனது தாய் மண்ணிலும் பற்றுக் கொண்டவர். தான் பிறந்த பிரதேசத்திலும் பெருமை கொள்பவர். அதனால்தான் மன்னாரை தனது பெயருடன் இணைத்துளாளர். தெளிவத்தை ஜோசப், திக்கவல்லை கமால், நீர்வை பொன்னையன், புலோலியூர் சதாசிவம், புலோலியூர் இரத்தினவேலோன், நாச்சியாதீவு பர்வீன், வல்வை அனந்தராஜ், திருமலை நவம், மருதமூரான், நீர்கொழும்பு முத்துலிங்கம், எனப் பலர் முன்னுதாரங்களாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் பற்றி எழுத்தாணி ஏந்தும் இயேசுக்கள்’கவிதையில் சொல்லும் வரிகள் இவ்வாறு அவர்களின் வாழ்வுக்கும் சாவுக்குமான சத்தியப் போரின் இருண்ட பக்கங்களின் வரிகளாக…
“..யுகம் யுகமாய்த்
தொடரும் காட்டிக் கொடுப்புகளும்
சிலுவை மரணங்களும்
உனக்கும் அவர்க்குமான
எழுதப்படாத ஒப்பந்தானே
காட்டிக் கொடுத்துவிடு..”
..
..மரணம் நிகழும்
வழிகள் தான் வேறு
சேருமிடம்மென்னவோ
கல்வாரி தானே,,’
காதல், ஊடல், பிரிவு, பிரிவின் துயர், கழிவிரக்கம் போன்ற மென் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன. இவை பெரும்பாலும் புதுக் கவிதைகளாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
உணர்வுகளை வாசகனின் மனதுக்கு நெருக்கமான வகையில் பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் மன்னார் அமுதனிடம் உண்டு. தேர்ந்தெடுத்த சொற்களைப் பயன்படுத்துகிறார்.
பிரிவு
“..உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை
சிலந்தி வலைகள்
நிரப்புகின்றன…”
மற்றொரு கவிதையில்
“..கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை - இன்றோ
மௌனம் காக்கிறாய்
வலிக்கிறதே…”
இன்னொன்று இவ்வாறு
"...நெடுநாள் பிரிவை உடனே போக்க
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்…”
எவ்வளவு யதார்த்தமான வரிகள். போலி மருத்துவ சேர்டிபிக்கட்டுகளைத் தேடும் போலி நோயாளிகள் இவர்கள். ஆனால் காதலில் ஆரோக்கியமானவர்கள். நூலைப் பற்றி இன்னும் நிறையப் பேசலாம். இன்றைய நூல் வெளியீட்டு அரங்கில் தலைமை தாங்க அழைத்தமைக்கு நன்றி. மருத்துவத் துறை சார்ந்த என்னை கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்த அவரது அன்பு நெகிழ வைக்கிறது.
இது மன்னார் அமுதனின் இரண்டாவது கவிதை நூல். இலக்கியப் பரப்பில் அவர் பயணப்பட இன்னும் நீண்ட வெளியும் காலமும் காத்திருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இன்னும் பல நூல்கள் வெளியிடுவதுடன், பல சாதனைகள் செய்ய வாழ்த்துகிறேன். சொந்த வாழ்விலும் இலக்கிய உலகிலும் உச்சங்களை எட்டி சமூகத்திற்குத் தொண்டாற்ற மீண்டும் வாழ்த்தி அமர்கிறேன்.
(’அக்குரோணி’ நூல் அறிமுக நிகழ்வில் மருத்துவக் கலாநிதி. எம்.கே.முருகானந்தன் ஆற்றிய தலைமையுரை)
நன்றி
# பொங்குதமிழ்
2 கருத்துகள்:
வாழ்த்துகள் பாஸ்...தொடரட்டும் உங்கள் பணி சிறப்புறவே!!!
நன்றி சிவா...
கருத்துரையிடுக