நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

வெள்ளி, ஜனவரி 13, 2012

தைப்பொங்கல் - சிறுவர் பாடல்


தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக

காணியிலே வைத்த பயிர்
காளையாக நிமிர - பொலிக்
காளையாக நிமிர
காடு கரை வீடு எல்லாம்
கதிரவனால் ஒளிர

கரையுடைத்து ஓடும் வெள்ளம்
அணைகளிலே மூழ்க - பெரு
அணைகளிலே மூழ்க
கவலைகளை மறந்து மக்கள்
களிப்பினிலே மூழ்க

வரப்புயர நெல்லுயரும்
வட்டிக் கடன் குறையும்
வட்டிக் கடன் குறையும்
வாழ வந்த பெண்களுக்கு
தங்கம் கழுத்தில் நிறையும்

கரும்பின் அடி இனிப்பு போல
காதல் வாழ்வில் மகிழ -மக்கள்
காதல் வாழ்வில் மகிழ
பசி பிணி பட்டினிகள்
சாதல் கண்டு மகிழ

பொங்க வேண்டும் இன்பமெலாம்
பசுவைக் கண்ட கன்றாய் - தாய்ப்
பசுவைக் கண்ட கன்றாய்
மங்க வேண்டும் துன்பமெல்லாம்
மாரி கண்ட கன்றாய்

தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக

வியாழன், ஜனவரி 12, 2012

அன்றும் இன்றும் என்றும் - பொங்கல் (சிறப்புக் கவியரங்கக் கவிதை)



வசந்தம் தொலைக்காட்சியில் 2012-01-15 ஆம் திகதி ஒளிபரப்பப்பட உள்ள பொங்கல் சிறப்புக் கவியரங்கம் - கவிபாடுவோர் தமிழ்மணி அகளங்கன்(தலைமை), வதிரி சி.ரவீந்திரன், கிண்ணியா அமீர் அலி, மன்னார் அமுதன்
---


கண்ணிரண்டும் காதிரண்டும் கொண்டவ னாயல்லாமல்
பண்ணிரண்டு படைக்கும் ஆற்றலோடு எனைவகுத்த
கண்ணாலோ காதாலோ கண்டறியா கர்த்தாவே
என்நாவில் வந்தமர் வாய். 

ஆன்ற பெருங்கவிஞர் அகளங்கன் தலைமையிலே
தோன்ற நான்செய்த பெரியதவம் யாதறியேன்
கூனோடும் குறையோடும் பிறக்குமென் கவிதையிலே
குறைகண்டால் பொறுத்தருள்வீர்

அன்று: 
மண்ணிலே கருவாகி 
மண்ணிலே உருவாகி
மண்ணிலே மாண்டவன் தான் உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்

வெள்ளாமை விளைகின்ற பூமி
விளைநிலமே உழவனுக்கு சாமி

பொன்னென்ற ஒரு வார்த்தை 
பொன்னைக் குறித்திடலாம்
மண்ணென்ற ஒரு வார்த்தை 
மண்ணைக் குறிப்பதில்லை

தோழர்களே
மண்ணென்ற ஒரு வார்த்தை 
மண்ணைக் குறிப்பதில்லை
அது நம் முன்னோரின் மானம்

மானம் காப்பதற்காய்
மறவர்கள் ஏரெடுத்து
வானம் பார்த்தே வரப்புயர்த்தி
வரண்ட நிலமெலாம் ஏருழுத்தி
ஒற்றை விதை விதைத்து
ஒரு கோடி நெல் அறுத்து
பத்துக் கரும்பெடுத்துப் பாகாக்கி 
பசுவின் பாலூற்றி 
ஆலாக்கு நெய்யூற்றி
ஆக்குவோம் பொங்கல் 

பொங்கலோ பொங்கலென்று
உழவர்கள் பாடுகையில்
பொங்குமே தைப்பொங்கல்
புலருமே தைத்திங்கள்

தமிழர் பட்ட துன்பமெல்லாம் மங்கட்டும்
தரணியிலே இன்ப வெள்ளம் பொங்கட்டும்

இன்று:
பொங்குக பொங்கலென்று
புலவர்கள் பாடிவிட்டால்
பொங்கிடுமோ... 
நான் பொங்கலைத் தான் பாடுகின்றேன்

பொங்குக பொங்கெலென்று
புலவர்கள் பாடிவிட்டால் 
பொங்கிடுமோ...
தமிழர் குடி பெற்ற துன்பம் 
மங்கிடுமோ
தரணியிலே இன்ப வெள்ளம்
தங்கிடுமோ

தரம் பிரித்து 
விதை விதைக்க காணியுமில்லை
தரிசு நிலம் 
கிழித்து உழ ஏருமேயில்லை
உருப் படியாய்
ஊரில் ஒரு காளையுமில்லை
உலைக்குப் போட 
உலக்கில் சிறு நெல்லுமேயில்லை

வீட்டிற்கு ஒருவர் 
விரைந்தோடிப் போய் நாட்டைக்
காக்கத் தேவையுமில்லை

நல்லதுதான் தோழர்களே
நாடென்றும் நிலமென்றும்
நமக்கெதற்கு

ஏதோ ஒரு மூலையிலே 
ஒடுங்கிக் கிடந்துவிட்டு
பசித்தால் பாண் தின்னும்
பரம்பரை நாம்

தீதோ நன்றோ 
ஏதும் அறியாமல்
ஏதோ ஒரு நாட்டில் உழுகின்றோம்

மண்ணும் நமதல்ல
மாடும் நமதல்ல -விளையும்
பொன்னும் நமதல்ல
பொருளும் நமதல்ல... உழுகின்றோம்

ஓயாமல் உழைத்துவிட்டு
சாய மடியின்றி
எங்கோ ஒரு மூலையிலே
சாகின்றோம்

நாமில்லா நாடா - தனியாக
நாடென்றும் நிலமென்றும் 
நமக்கெதற்குத் தோழர்களே

என்றும்:
நமக்கெதுவும் வேண்டாம் தான்
நம் குடிக்கும் வேண்டாமா
என்றும் ஏர் பூட்டியுழ 
சாதி சனம் கூடியழ
நமக்கெதுவும் வேண்டாம் தான் 
நம் குடிக்கும் வேண்டாமா

மண்ணிலே கருவாகி 
மண்ணிலே உருவாகி
மண்ணையே ஆண்டவனே உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்

விளைநிலங்கள் செழிக்காது
சூரியன் இன்றி
உழைத்துக் களைத்து உழவனுக்கு
சொல்லுவோம் நன்றி

நன்றி சொல்ல நாமும் இன்று 
பொங்க வேண்டுமே
நாளை ஒரு நாள் மலரும்
பொங்க வேண்டுமே

பொங்கட்டும் இன்பம்
பொங்கலைப் போலினிமேல்
மங்கட்டும் நாம் பட்ட துன்பமெலாம்
தங்கட்டும் இன்பம் தரணியெல்லாம்

===================