நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

புதன், ஜூன் 29, 2011

வா மணப்போம் விதவை


வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியும் ஒருநாளில்
தீட்டினோம் கூராயுதம்

ஆயினும் பெரிதாய்
ஆக்கிய தொன்றில்லை
பேயினுக் கெதிராய்ப்
போர்க்கொடி தூக்கியெம்
பூவையும் பொட்டையும்
இழந்தோம் - நம்வீட்டு
பூவைக்கு பூவைப்பார் யார்

புண்ணதுவே புண்ணாக
இருக்கட்டும் நெஞ்சத்தில்
மண்ணுக்காய் இல்லாமல்
மாண்டவென் தோழர்க்காய்
வென்றே தரவேண்டும்
விரைவாக சந்ததியை
வா மணப்போம் விதவை

இறுதித் தருவாயில்
உயிர்நீத்த உடற்கெல்லாம்
சிறுதீ மூட்ட ஆளில்லை
குற்றுயிராய்க்
கிடந்த உடலேறிச்
சுகம்கண்ட காடையரின்
பண்பாட்டைப் பார்த்தே பழகு

ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட பூமியினை
பூண்டோடு அழித்துப்
புன்னகையைச் சீரழித்தீர்
மாண்டோ போனோம்
மறவர்நாம் - வடலிகள்
மீண்டும் வானுயரும்

நன்றி:
# பொங்குதமிழ்

வெள்ளி, ஜூன் 24, 2011

சாய்ந்தமருதில் மாபெரும் கலை இலக்கிய நிகழ்வுகள்


சாய்ந்தமருது “லக்ஸ்டோ” அமையமும், “தடாகம்” கலை இலக்கிய வட்டமும் இணைந்து மாபெரும் ஒருநாள் கலை இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை5.00 மணி வரை கமு/அல் ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் மருதூர் அன்சாரின் தொகுப்பில் 26 கவிஞர்கள் இணைந்து வெளியிடும் “உன்னை நினைப்பதற்கு” எனும் கவிதை நூலும் சப்னா அமீனின் “நிலாச்சோறு” எனும் கவிதை நூலும் வெளியிடப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சிறப்புக் கவியரங்கமும் இடம்பெற உள்ளன.தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெற உள்ள இக்கவியரங்கில் வெவ்வேறு கவியடிகளில் கவிமணி என்.நஜ்முல் ஹுசைன், கிண்ணியா அமீர் அலி, யாழ் அஸீம், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, கவிஞர் அஸ்மின், எஸ்.ஜனூஸ், மன்னார் அமுதன், ஏ.சி.ராஹில், சுகைதா ஏ.ஹரீம், தர்பா பானு ஆகிய கவிஞர்கள் கலந்து சிற்ப்பிக்க உள்ளனர்.

மேலும் கலை, இலக்கிய ,சமூக, ஊடகத் துறையில் சாதித்தவர்களுக்கான லக்ஸ்டோவின் கெளரவிப்பும்,தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "அகஸ்தியர் விருது" வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளன."வானொலிக் குயில் " ராஜேஷ்வரி சண்முகம் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவுள்ளார்.


கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

தகவல்:
நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு:-
ஏ.எல்.அன்ஸார்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
எஸ்.ஜனூஸ்
பி.எம்.ரியாத்

வெள்ளி, ஜூன் 03, 2011

“மனிதாபிமானிகள் ” – சிறுகதை


“மியாவ்…”, “மியாவ்…” என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடிக் கதைக்கும் எங்கள் மனிதாபிமானம் தொடர்பான உரையாடலை இடைநிறுத்த மரக்கதிரையிலிருந்து எழும்பி வந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன்.

தன் அம்மாவை எங்கேயோ தொலைத்துவிட்ட, அழகான வௌ;ளைநிறப் பூனைக்குட்டியொன்று எங்கள் வீட்டின் கீழுள்ள சீனாக் கிழவியின் வீட்டிற்கு முன் நின்று கத்திக்கொண்டிருந்தது. அன்று முழுமதி தினம். ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் எங்கிறதால ரோட்டுல பெருசா சனம் இல்ல. எங்கள் குடியிருப்பு புறாக்கூடு மாதிரி. சதுரம், சதுரமா கட்டப்பட்ட அடுக்கு மாடிமனை. எங்கட முதலாவது மாடி எங்கிறதால ஏறி இறங்க லேசு. பக்கத்துல, மேல, கீழ எண்டு நிறைய வீடுகள் இருந்தாலும் இரத்தம் மலிஞ்ச பூமி என்கிறதால யாரும், யாரோடும் பெருசா புழங்கிறது இல்ல. மனசுல ஓர் அழுத்தத்தோட வாழுற மக்கள், படியில பார்த்தா மட்டும் சிரிச்சுக்குவாங்க. எங்கட பக்கத்து வீட்டில ஒரு அம்மம்மாவும், அவட அம்பது வயசு மகளும் இருக்குறாங்க. கீழ்வீட்டில சீனாக்கிழவி தன் மகள், பேரப்பிள்ளைகளோட வாழுறா. அவ சின்னப்பிள்ளையா இருந்தப்ப சீனாவுல இருந்தாவாம், அதனால எல்லாரும் அவவ சீனாக்கிழவி எண்டு சொல்லுவாங்க.

“ஐயோ பாவம், அழகான வெள்ளைக் குட்டி” எண்டு நினைச்சுக் கொண்டிருக்கையிலேயே, தமிழ் தொலைக்காட்சியில் “நியூஸ் அலர்ட்” லோகோ சுத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. பூனைக்குட்டியிலிருந்த கவனம் டீவியை நோக்கித் திரும்பியது.

“இவன்கள், இந்த டீவியை வச்சுக் கொண்டு படுற பாடு. இந்த வீணாப் போன விளம்பரங்களையும், இதையும் தானே சுத்திச் சுத்திக் காட்டுறான்கள். ஒரு பாட்டையாவது முழுசாப் போடுறான்களா. டெலிபோன் கதைக்கிறப்போ சொல்லனடா தம்பி” என்று வசைபாடிக் கொண்டே பக்கத்து வீட்டு அம்மம்மா எழும்பினா. செய்தி போற நேரம் தான் அவக்கு இடைவேளை. அந்த நேரம் அவட அவசர, அவசிய வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பவும் நிகழ்ச்சி தொடங்க வந்திருந்து பார்ப்பது வழக்கம். அவங்கட வீட்டில டீவி இருந்தாலும், தனியா இருந்து பார்க்க அம்மம்மாவுக்குப் பிடிக்கிறதில்லை.

நியூஸ் அலர்ட்டில வன்னியிலிருந்து வந்து குவியிர மக்களைக் காட்டுறப்ப கண்ணுக்குள்ள இருந்து முட்டக் கண்ணீர்த் துளி இரண்டு நிலத்தில விழுந்து தெறித்தது. தாயில்லாம, தகப்பனில்லாம, ஒவ்வொரு உயிரும், மற்றொரு துணையையிழந்து, இழக்கிறதுக்கும், தொலைக்கிறதுக்கும் ஒண்ணுமில்லாத சீவன்கள் கை, கால்களை இழந்து கீழ கத்திக்கொண்டிருக்கும் பூனைக்குட்டி மாதிரி அனாதரவாய் நிக்கிறதப் பார்த்தா யாருக்குத் தான் துக்கம் தொண்டையை அடைக்காது. வன்னிப் பெருநிலத்தின் மக்கள் நிலையைக் கண்ட சனமெல்லாம் ஒரே அதே கதையைக் கதைத்துக் கொண்டு ரோட்டுல இங்கையும் அங்கையும் கூடிக் கூடிக் கதைக்குதுகள். பூனைக்குட்டியும் போறவார ஆக்களுக்குப் பின்னால இங்கையும் அங்கையும் கத்திக்கொண்டே ஓடித்திரிந்தது.

எங்கட மனிதாபிமானக் கதைகள் வன்னி மக்களையும் கடந்து,கடல் கடந்து எத்தியோப்பியா வரை போய் முடிகையில் பூனைக்குட்டி உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டிருந்தது. பின்னேரம் ஆறு மணியாயும் ஆயிட்டு. மின்னல் வெட்டோடும், இடிச் சத்தத்தோடும் அரசியல் நிகழ்ச்சியொன்று டீவியில தொடங்க வெளியில மழையும் தூறத் தொடங்கியது. அந்நிகழ்ச்சியில் “டிங் டாங்” சின்னத்தில் எலக்சன் கேட்ட பச்சோந்தி சேகர் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு வன்னி மக்களுக்கு தனது நீலிக்கண்ணீரை சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மா “ 83கலவர நேரம் பல தோட்டங்களை எரிச்சதுக்கு இவனுக்கு பரிசாக் கிடைச்சது தானாம் இந்த பதவி, பவுசெல்லாம். ஆடு நனையுதுன்னு ஏன் இந்த ஓநாய் அழுகுது?” எண்டு தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்தா.

கடைசி வார்த்தையைக் கேட்டதும் மண்டைக்குள்ள பொறிதட்ட பூனைக்குட்டி நனையுதேன்னு எட்டிப் பார்த்தேன். தொப்பலா நனஞ்சு போய், எல்லாத்தையும் இழந்த தமிழ்ச்சனம் மாதிரி கூனிக் குறுகி களச்சுப் போய் நிக்குது. கொஞ்சம் உசாரானதும், குட பிடிச்சுக்கொண்டு போற வாற ஆக்களுக்குப் பின்னால எல்லாம் கத்திக்கொண்டே ஓடித்திரியுது.

பொறுமையிழந்து படிகளில் இறங்கி ஓடிப்போய் சீனாக்கிழவியின் வீட்டிற்கு முன் நின்ற பூனக்குட்டியைத் தூக்கிக் கொண்டுவந்து மெதுவாகத் துவட்டி விட்டு, பாலைக் கரைத்துக் குடிக்கக் கொடுத்தேன். குட்டிக்கு பாலைக் குடிக்கக் கூடத் தெரியலை. பால் மூக்குக்குள்ள போக, கொஞ்ச நேரம் தும்மியது. மத்தியானத்திலயிருந்து அது ஒண்டும் சாப்பிடாததாலயோ, இல்ல சுத்தியும் ஆக்களப் பார்த்த பயத்தினாலயோ தெரியல. இன்னும் சத்தமாகக் கத்தித் தொலைத்தது. பூனைக்குட்டியோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கையில் “டொக்…டொக்” என்று கதவு தட்டும் சத்தம் கேக்க முன்னறைக்குப் போய் திறந்து பார்த்தால், கீழ்வீட்டு சீனாக்கிழவி.

“ வாங்க ஆச்சி, என்ன இந்த நேரத்தில” என்றேன்.

“பூனைக்குட்டி வளக்கிறீங்களா மகன்?” என்று சகோதர மொழியில் கேட்டவாறே உள்ளே வந்தா. இவ கதைச்சது, குட்டிக்கு விளங்கியது போல கதவருகே கத்திக்கொண்டே ஓடிவந்தது. “நீங்க வளருங்க தம்பி, எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா இதைச் சத்தம் போட வேணாமெண்டு சொல்லுங்க, எங்களுக்கு இரவைக்கு நித்திரை கொள்ள முடியாது. அப்படிச் செய்ய முடியாட்டி வேறெங்கயாவது கொண்டுபோய் விட்டிருங்க.”என்று தொடர்ந்தாள்.

“என்னது பூனைக்குட்டி நாங்க வளக்குறோமா?” எனக்குள் எழுந்த கோவத்தை வெளிப்படுத்த முனைகையில், அம்மம்மாவும் என் கையைப் புடிச்சுச் சொன்னா “விட்டிடு மகன். இதுக்கு சாப்பிடக் கூடத் தெரியல்ல. எப்பிடிடா வளர்ப்பாய்”

மத்தியானத்திலிருந்து மனிதாபிமானத்தை பற்றி விளாசித் தள்ளிக் கொண்டிருந்த எனது நண்பர்களும் “ஓம் மச்சான்” என்று வழிமொழிய பத்திரமாகக் கீழே கொண்டு போய் வேறு இரண்டு பெரிய பூனைகளுக்கு அருகில் விட்டு வந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு நின்றேன். ஒருபூனை மெதுவாக வந்து குட்டியை மணந்து பார்த்து, தன் நாக்கால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கையிலேயே எங்கிருந்தோ பாய்ந்து வந்த வெறிபிடித்த தெருநாய் டக்கென்று குட்டியின் கழுத்தைக் கௌவி ஒரு உலுப்பு உலுப்பியது.

பூனைக்குட்டி, ஒரு சிறு குழந்தையின் குரலை ஒத்த ஓசையுடன் கத்தி ஓய்ந்தது. ஒரு கிழிந்த வெல்வெட் துணியில் சிவப்பு மையை ஊற்றியது போல கிடந்த அதன் உடலில் மெல்ல மெல்ல மூச்சு என் கண் முன்னால் அடங்கியது.

இப்போது மனிதாபிமானிகள் பலர் மழைக்குள் குடைபிடித்த படியே பூனைக்குட்டியைச் சுற்றி நின்று தங்களுக்குள் மனிதாபிமானக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சீனாக் கிழவி “உச்” கொட்டிக்கொண்டே மேல்நோக்கிப் பார்த்தா. ஜன்னலருகே கண்ணீரோடு நின்ற என்னட்ட சொன்னா “மகன், நீங்க வளர்த்த பூனைக்குட்டி தான் எங்கட வீட்டுக்கு முன்னால செத்துக் கிடக்குது, இதை அப்புறப்படுத்துங்கள் என்று…

டீவியில மறுபடியும் “நியூஸ் அலர்ட்” லோகோ சுத்திக்கொண்டு வருகிறது..

நன்றி:
#ஜீவநதி
#தமிழ் ஓதர்ஸ்
#தமிழ்விசை
# ஈழத்து சிறுகதைகள்

புதன், ஜூன் 01, 2011

மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்



கண்டேன் அவளைக்
கடற்கரை அருகே

நின்றேன் ஒரு கணம்
நினைவுகள் இழந்து

சென்றேன் அந்தச்
செம்மொழி அருகில்

வந்தனம் என்றேன்
வாய்மொழி இல்லை

கண்டும் காணாமல்
நிற்காமல் செல்லுமிவள்
நிலவின் மகளோ

நீண்டதாய்ச் சொல்தொடுத்தும்
தீண்டாமல் செல்கிறாளே
நீரின் உறவோ

தொடர்ந்தேன் பின்னால்
தொழுதேன் கண்ணால்

அமர்ந்தேன் அந்த
அமிர்தம் அருகில்

**

தாயின் கையைத்
தட்டி எழுந்தவள்
தாமரைப் பூக்களாய்
வெட்டி மலர்ந்தாள்

“போதும் போதும்”
போகலாம் என்ற
அன்னையை முறைத்து
அருகினில் வந்தாள்

போறோம் நாங்க
நீங்களும் போங்க

இதழ்கள் பிரித்து
இருவரி உதிர்த்து
அரிவரிச் சிறுமியாய்
மறைந்தவள் போனாள்

***

சிந்தையை விட்டுச்
சிதற மறுக்கும்
மங்கையைக் கண்டு
மாதங்கள் இரண்டு

மறுபடி அவளைக்
காணும் நாள் வரை
மனதினை வதைக்கும்
கனவுகள் திரண்டு

***

தேய்பிறையோ,
வளர்பிறையோ
தெரியாத நிலவு அவள்

அடைமழையோ
இடி புயலோ
அறியாத அல்லி அவள்

***

புன்னகையின் தேவதையாய்
பூமியிலே பிறந்தவளே
என்னபிழை நான் செய்தேன்
ஏனென்னை வெறுக்கின்றாய்

காணாமல் நானிருந்தால்
கணமொன்றில் இறந்திடுவேன்
நோய்கொண்டு போகுமுன்னே
நானுன்னைக் காண வேண்டும்

***

என்
பாசமுள்ள பூமகளே

வாசலிலே கண்டவுடன்
வாங்கப்பா என்காமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்டு
அம்மா அம்மாவென
அரற்றி அழுதவளே

அச்சம் வேண்டாம்

பிச்சைக்காரனோ
பிள்ளை பிடிப்பவனோ
அச்சம் அறியாத – இளம்
ஆண்மகனோ நானில்லை

அப்பா…
நானுன் அப்பா

சீதனச் சீரழிவால்
சிதறிய நம் குடும்பம்
சீதேவி உன்னாலே
சீராக வரம் வேண்டும்

வாசலிலே கண்டவுடன்
வாங்க என்று சொல்லாமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்ட
என்
செல்ல மகளே -உன்னைச்
சீராட்ட வரம் வேண்டும்

================
கவிதையின் ஒலிப்பதிவு: இங்கே
==================

குறிப்பு:

மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதல் லெப்பை அவர்களை நினைவுறுத்தும் முகமாக சக்தி பண்பலையில் இடம்பெற்ற கவிராத்திரி நிகழ்விற்காக “மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்” என கொடுக்கப்பட்ட தலைப்பிற்காக எழுதப்பட்ட கவிதை… இக்கவி வரிகள் கவிஞர் அப்துல் காதர் லெப்பை 1967 இல் வெளியிட்ட “செய்நம்பு நாச்சியார் மாண்மியம்” எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.