நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

செவ்வாய், ஜூலை 12, 2011

அருள் மா - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே

ஆண்டுகள் நாற்பதாய் அருள்மா புரிந்த
அரும்பணி உரைப்பது மன்றக் கடமை
ஆற்றிய பணியில் குறைநிறை அளந்து
குற்றம் பரப்புதல் சிலரது மடமை

அருள்மா அவர்கள் அணிந்தது வெண்மை
ஆடைகள் போலவே உள்ளமும் தும்பை
அடியவன் தோளிலும் அருள்மா கைகள்
ஆதரவாகத் தொட்டது உண்மை

வருவார் அமர்வார் வார்த்தைகள் மொழியார்
வாசலில் காண்கையில் புன்னகை மொழிவார்
இலக்கிய உரைகளை இயம்பி அமர்கையில்
இனிதிலு மினிது இயம்பிய தென்பார்

அருளின் கதைகள் எல்லாம் விதைகள்
கருப்பொருள் செறிவைக் கதைத்தனர் பலபேர்
கதைகளின் மாந்தர் கண்ணில் படுகையில்
விதைகளில் பலது விருட்சமாய் வளரும்

வற்றிய கிணற்றில் தவளைகள் போலே
வாடயிலே நீர் ஊற்றினீர் எம்மில்
பற்றிய பிடியைத் தளர விடாதே
வருவாய் விரைவாய், உயர்வாய் என்றீர்

தூற்றிப் பழகா போற்றும் குணத்தார்
ஆற்றிய பணிகள் அத்தனை அருமை
கற்றதை எல்லாம் கைமண் அளவாய்க்
கருதியே அருள்மா கதைத்தது அருமை

பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே

*இலக்கியவாதி அருள் மா.இராஜேந்திரனின் மறைவையொட்டிய கவிதை
*எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரன் பற்றிய மேலதிக தகவல்கள்: இங்கே

கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை நடாத்தும்
எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரன் - முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம்


மாதந்தோறும் நடைபெறும் கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் முழுமதி தின இலக்கியப் பாசறை நிகழ்வில் இம்முறை எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை நினைவு கூறுமுகமாக எதிர்வரும் 14.07.2011 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படுள்ளது. 


டிலாசால் அருட்சகோதரர் பொனவெஞ்சர் தலைமையில் நடைபெறவுள்ள  இந்நிகழ்வில் எழுத்தாளர் அருள்மா இராஜேந்திரன் ஆற்றிய இலக்கிய சேவைகள் மற்றும் மனிதாபிமானப் பணிகள் பற்றிய உரையை ஆசிரியர் தாசியிசஸ் அவர்களும், மன்னார் அமுதனும் ஆற்றவுள்ளனர். 


இலக்கிய ஆர்வலர்களையும், சக படைப்பாளிகளையும் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


0 கருத்துகள்: