இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
குறிப்பு: நான் படித்த அக்குரோணி -- நன்றி கவித்தோழன் முகமட் பஸ்லி
கணிணியுகம் என்று வர்ணிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் என்னதான் எல்லாத்துறைகளும் கணிணிமயப்படுத்தப்பட்டு இயந்திரங்களின் துணைகொண்டு இயங்கிக் கொண்டிருந்தபோதிலும் மனிதனின் வேலைப்பளு குறைந்ததாகத் தெரியவில்லை. இன்று இயந்திரங்களிலும் வேகமாக மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்றே சொல்லவேண்டும். இவ்வாறு உலகின் சுழற்ச்சிக்கேற்ப முழு முயற்சியுடன் ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் மனதுக்கு நல்ல ஓய்வும் தேவைப்படுகிறது. சிறந்த ஓய்வு கிடைக்கும்போதே மறுநாள் அவனால் புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை ஆரம்பிக்க முடியும். இதனால்தான் மனிதன் பெரிதும் அமைதியை நாடுகிறான். மன அமைதியைப் பெறுவதற்காக அவன் எத்தனையோ முயற்சிகளை எடுக்கிறான், எங்கெங்கெல்லாமோ செல்கிறான். இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, ஆசை, பொறாமை இப்படி பலவகை அம்சங்களினால் கனத்து நிறம்பும் மனதுக்கு கவிதைகள் நல்ல ஆறுதலை வழங்குகின்றன என்று சொல்லப்படுகின்றது. இது உண்மை என்றே நான் கருதுகிறேன். இந்த ஆறுதல் எனக்கும் பல சந்தர்ப்பங்களில் கிடைத்துள்ளது. அன்மையில் மன்னார் அமுதனின் அக்குரோனி கவிதைத் தொகுதியை வாசிக்கும் போது மீண்டும் ஒரு முறை இந்த உணர்வினை அனுபவிக்கக் கூடியதாயிருந்தது.
கவிதை என்றால் என்ன? என்பதில் மூத்த பெரும் கவிஞர்களிடத்திலேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் தமக்குரிய பாணியில் வித்தியாசமான விளக்கங்களைத் தருவது கொண்டு கவிதைக்கு பொதுவான ஒரு வரைவிலக்கணம் இன்னும் வழங்கப்படவில்லை என்றே சொல்லலாம். எது எப்படியோ கவிதை என்னும் போது அதில் கட்டாயமாக கவிநயம் இருக்கவேண்டும் வெறுமனே வார்த்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டு போவதால் அது கவிதையாகிவிடாது. கவிதை காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் பல வடிவங்களால் தன்னை அழங்கரித்துக் கொள்கிறது. மரபு, புது, நவீனம், ஹைக்கூ என்று எந்த வடிவில் கவிதைகள் எழுதப்பட்டாலும் அதில் பொதிந்திருக்கும் கவித்துவ அழகினைப் பொறுத்தே அவை வாசகர் மனதில் இடம்பிடிக்கின்றன. சில கவிதைகளை சந்தங்கள் அழகுபடுத்துகின்றன.
சில கவிதைகளுக்கு சந்தங்களோ, ஓசையோ தேவைப்படுவது இல்லை கவிஞனின் கற்பனைத் திறன் மேலோங்கும் போது சாதாரன வசனங்களே கவிதையை அழகுபடுத்தி விடுகின்றன. கவிஞனின் கற்பனைத் திறனே கவிதையின் வெற்றியின் அடித்தளம்.
மன்னார் அமுதனின் அக்குரோணி கவிதைகள் மேற்குறிபபிட்ட சில வடிவங்களைத் தாங்கியிருந்த போதிலும் பெரும்பாலான கவிதைள் சந்தங்களின் துணை கொள்ளாது வெறும் வசனங்களைக் கொண்டே வடிக்கப்பட்டிருக்கின்றன. கவிஞரின் கற்பனை ஆளுமை வாசகரின் மனங்களின் உரிய கவிதைக்கான காட்சியை அப்படியே வரைந்துவிடுகின்றது என்று சொல்லலாம். அதேநேரம் சில கவிதைகளில் சந்தங்கள் அழகுடன் மிளிர்வதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
தமழே ஆதித் தாயே நீயே
தமிழர் போற்றும் சேயே, மாதா
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்
புலமை மிகுந்த தருவின் கன்யே
சொல்வதற் கரிய கனிமை - மொழியில்
கொல்வதற் கரிய உயிர்மை - போரால்
வெல்வதற் கரிய வாய்மையின் கூர்மை
கொண்டதே தமிழ்த் தாயின் பழமை
என்று நீண்டு செல்லும் கவிதையில் அழகிய சந்தங்களைக் கொண்டு தமிழுக்கு ஆடைகட்டி அழங்கரித்திருக்கிறார் கவிஞர். இக்கவிதையொன்றே பேதும் இவரது கவிப்புலமையை அறிந்து கொள்வதற்கு. கவிஞருக்கு தமிழ் மீதுள்ள பற்று, மரியாதை, வெறி என்பன துள்ளியமாகப் புலப்படுகின்றன. கயல்விழி மாதரிலும் முத்தமிழ் அழகு, குழந்தையின் நாவில் உச்சரிக்கப்படும்போது அது குழலிசையிலும் இனிமை, வேற்று மொழிக் கலப்பின்றி தமிழ் பேசும் காலம் வந்தே தீரும் எம் செவிகளுக்கு தேனாராய் மாறும், நல்லவர் நாவில் சரசம் புரியும் தீமையைக் கண்டு பொங்கியெழும் என்று தமிழ்ப்பால் குடித்து கவிப்பால் சுரந்திருக்கும் கவிஞர் மெல்லத் தமிழினிச் சாகும் என்ற வீனர்களின் வார்த்தைகள் மாளும் என்று வீரமாய் கொதித்தெழுகிறார். தமிழ் சுரக்கும் இக்கவிதையை அருந்துவோருக்கு வெறும் ஆனந்தம் மட்டுமல்ல புதத் தெம்பும் நிச்சயமாகப் பிறக்கும்.
ஈனறவளே நீ, அறிவாய் அம்மா
இதயச்சுத்தி யெல்லாம் சும்மா
மடியைப் பங்கிட மாக்கள் கூட்டம் - உன்
மைந்தரை வதைப்பதை உணராயோ?
கோடி மக்கள் சுகமாக - மறு
கோடியில் மக்கள் சவமாக - அதைப்
பாடி உறைக்கிறேன் மரமாக - நீ
கேட்டு உருகிட வாராயோ?
கண்ணீரும் சோகமும் குடிகொண்ட ஒடுக்கப்ப்ட்ட ஒரு சமுதாயத்தின் உள்ளக் குமுறல்களை இலங்கைத் தாயிடம் எடுத்து வைத்து நீதி கேட்கிறார் கவிஞர். எம்கை விலங்கினை உடைத்து காலில் சலங்கை சினுங்க விட மாட்டாயோ?, மடைக்குள் அடைபட்ட மக்கள் வெள்ளத்தை மரணத்தினின்று நீ காப்பாயா ?, நலிந்தோர் முதுகில் விதைத்த தம் வலிமையை மாற்றிட வல்லமை தாராயோ? என்று மனமுருகி பாடும் வரிகளின் வலியை வாசகர்களது உள்ளங்களும் உணர்கின்றன.
மினுங்கும் உடைகளுள்
புதைந்த உடல்களோடு
வெளிப்படுகிறது பொய்மை
சிலநூறு ரூபாய்களுக்கும்
ஒரு வேளை உணவிற்கும்
விற்கப்படும் தேசியம்
சமகால அரசியலை அருமையாகப் படம்பிடித்திருககிறார் கவிஞர். சதிகார அரசியல்வாதிகள் சுதியாக வாழுகையில் விதியென்று எண்ணி தினம் கதியற்றுப் போன மக்களில் ஒருவனாக நின்று கவிபாடியிருக்கிறார். பலர் கவனத்தை ஈர்க்கிறார். தகுதியற்றவனை தலைவனாக தெரிவு செய்து தம்மைத்தாமே ஜனநாயக அடிமைகளாக ஆக்கிக் கொண்டவாகளின் மண்டையில் படும்படி இருக்கிறது கவிதை. இதற்குச் சமமான கருப் பொருளில் வேறுசில கவிதைகளில் தனது ஆதங்கங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் என்புதும் குறிப்பிடத்தக்கது.
ஒத்த கருத்தோடும்
சிந்தனையோடும்
மாற்றுக் கருத்தில்லா
மாணிக்கங்களாய் மிளிர
நாமென்ன
கொள்கைக்காய் கை கோர்த்தவரா?
உன்னை நான் அனுசரிக்க
என்னை நீ தினம் சகிக்க
முரண்பட்ட கருத்துக்கள்
முதிர்வடையும் வரை
நிலாவொளியில் கதை பேசி
முடிவெடுக்காமலேயே
தூங்கிப் போவோமே
இது தான் காதலோ?
என்ற வினாவோடு முடித்திருக்கும் கவிதையில் கருத்து முரண்பாடு பற்றி மிகச் சாதாரனமான சொற்களைக் கொண்டு விவரிக்கிறார் கவிஞர். காதலிக்கும் போது எல்லாக் காதலர்களும் 'உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்' என்ற உச்சரிபபினையே தமது உணர்ச்சியில் உறைய வைத்திருப்பார்கள் ஆனால் ஒன்றாக இணைந்து வாழும்போதான் சிறியதொரு விடயத்துக்கும் கருத்து முரண்படுவார்கள். இது யதார்த்தத்தில் பரவலாகக் காணக்கூடிய ஒரு விடயம். இதை மிக கச்சிதமாகப் பாடியிருக்கும் கவிஞரின் திறதை கவிதையில் ஆழமாய்ப் பதிந்துள்ளது.
இன்னும் சில கவிதைகளில் கவிஞர் காதலைப் பற்றி வடித்திருந்த போதிலும் அவை அனைத்திலும்; ஒன்று சேராத அல்லது சேர்ந்த பின்னும் பிரிந்து வாழ்கின்ற காதலர்களைப் பற்றியே பாடியுள்ளார். இவரது காதல் வரிகள் அனேகமான கவிஞர்களின் வரிகளிலிருந்து சற்று மாறுபட்டதாகவே தெரிகின்றது. இச்சையைத் தூண்டும்படியான வர்ணனைகள் காணக்கூடியதாய் இல்லை. ஒழுக்கம் பேனப்பட்ட காதல் வரிகளாகவே தென்படுகின்றன.
மேலும் பல குறுங்கவிதைகளாலும் கவிஞர் அக்குரோணியை அழகுபடுத்துகிறார்.
உறவுகள்
முகம் மலர
உறவினரை வழியனுப்பிவிட்டு
வீட்டுக்காரர்
வெளியேற்றிய பெருமூச்சிலும்
அறைந்து சாத்திய
கதவின் அதிர்விழும்
அறுந்து தொங்கியது
உறவின் இழை
சண்டை
இரு நாள் சண்டையில்
காய்ந்து போனது
கழுவப்படாத கோப்பைகளும்
வயிறும்
போலிகள்
அகத்தினில் விளையா அன்பை
முகத்தினில் காட்டிச் சிரிப்போர்
நகத்தினை ஒப்பர் - மாக்களை
முதலிலே வெட்டியெறி
போன்றவற்றுடன் குறுங்கவிதைகளும் ஆழமான அர்த்தங்களை ஒரு சில சொற்களில் தாங்கி நிற்கின்றன.
பொதுவாக கவிஞர் மன்னார் அமுதனின் எல்லாக் கவிதைகளிளும் ஒரு நேர்த்தியான கொண்டு செல்லலை காணக்கூடியதாய் உள்ளது. அழகாக ஆரம்பிக்கப்பட்டு சீராக நகர்த்தபபட்டு இனிதாக முடிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வரிகளைக் கையாண்டிருக்கும் விதம் வாசகர்களை உரிய காட்சிக்கு அழைத்துச் செல்கின்றது அந்தக் காட்சிகள் வாசகர்களுடன் உறையாடுகின்றன அப்படியே வாசகர்களது உள்ளங்களில் தங்கிவிடுகின்றன. மேலும் இவரது வரிகளில் அருவருக்கத்தக்க சொற்களையோ, ஆபாசமான சொற்களையோ காணமுடியாதிருப்பதுடன் கிராமிய மண்வாசனை மிதமாகவே கலந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. பொறுத்தமான இடங்களில் கடினமான சொற்களையும் பொறுத்தமான இடங்களில் சாதாரன சொற்களையும் திறமையாக் கையாண்டிருப்பதன் காரணமாக கவிதைகள்; தரத்தில் மேலோங்கிக் காணப்படுகின்றன.
இளையவன் எனக்கு அக்குரோணியில் குறைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சில கவிதைகள் மிகவும் நீளமாக உள்ளது. சுருக்கியிருக்கலாம் என்து என் தாழ்மையான ஆலோசனை. மற்றும் புத்தகத்தின் அட்டையை 'லெமினேடிங்' செய்திருந்தால் பாவனைக் காலம் அதிகரிப்பதற்கு உறுதுணையாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
கவிஞர் மன்னார் அமுதன் எனக்கு 'பேஸ்புக்' மூலமாகவே அறிமுகமானார். 'பேஸ்புக்'கில் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளோமே தவிர நான் இதுவரை அவரை சந்தித்ததுமில்லை, அவருடன் கதைத்ததுமில்லை. 'பேஸ்புக்' வாயிலாக அவரின் அக்குரோணி புத்தகம் பற்றி அறிந்து கொண்டதில் அதனைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்குமுன் அது கைக்கூடியது. புத்தகத்தைப் படித்து முடித்ததும் அவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன் ஒரு கவிஞனுக்கு வாசகர்களின் கருத்துக்கள் எந்தளவுக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்பதை உணர்ந்தவன் நான். இங்கு எல்லாக் கவிதைகளுக்கும் நான் கருத்துச் சொல்லவில்லை. ஆனால் எல்லாக் கவிதைகளுமே கருத்தாழம் மிக்கதாய் உள்ளது. மொத்தத்தில் மன்னார் அமுதனில் கவிதைகள் அமுதம். அவர் மேலும் மேலும் பல வெயியீடுகளை தந்து இலக்கிய வானில் பிரகாசிக்க என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
நன்றி: கவித்தோழன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக