படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியால் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன.
இவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் போதும் பல முட்டுக்கட்டைகளைப் போடும் மூத்தவர்கள், நாற்பது ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மல்லிகை இலக்கிய மாசிகையை ஆரம்பித்தது ஒரு இளைஞனான மல்லிகை ஜீவா தான் என்பதை மறந்து விடுகின்றனர்.
அத்தகைய ஆர்வமும், படைப்பிலக்கிய ஆளுமையும் கொண்ட இளைஞன் கலாமணி பரணீதரனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பே “மீண்டும் துளிர்ப்போம்”. பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும், தேசியப்பத்திரிகைகளிலும் பிரசுரமாகிய தனது சிறுகதைகளைத் தொகுத்து “தீவிர இலக்கியத்தின் கேடயங்கள் சிறுசஞ்சிகைகளே” எனும் வாக்கிற்கு வலிமை சேர்த்திருக்கின்றார். பரணீதரன் சிறுகதைகள் மட்டுமின்றி கவிதை, கட்டுரை, இசை நாடகம் என பல்கலையிலும் தன் பன்முக ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ”இலக்கியமும் எதிர்காலமும்“ எனும் கட்டுரைத்தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். கதையாசிரியரால் ஆரம்பிக்கப்பட்ட கலை இலக்கிய மாசிகையான ஜீவநதி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தன் கிளைகளைப் பரப்பி வற்றாத நதியாக வலம் வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மீண்டும் துளிர்ப்போம் - சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 13 கதைகளும் சமூக விமர்சங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தனிமனித மாற்றத்தின் ஊடாக குடும்ப மாற்றத்தையும் அதனூடாக சமூக மாற்றத்தையும் வலியுறுத்தும் கதாசிரியர், உயிரிலும் மேலானது, பொய்முகங்கள் போன்ற கதைகள் சாதித் தடிப்பானது எவ்வாறு பெற்ற பிள்ளைகளுக்கும், அவர்களது ஒன்றுமறியா பால்ய நண்பர்களுக்கும் கூடக் குடமுடைத்து கொள்ளி வைத்து விடுகிறது என்பதை
“டேய்! எனக்கு எந்தக் கதையும் சொல்லாதை, முடிவாக் கேக்கிறன். அவளை விட்டுட்டு நீ வாறியோ? அப்படி வாராய் என்றால் உன்னை வெளியாலை எடுக்கிறம்” -- (உயிரிலும் மேலானது)
“நாலு எழுத்துப் படிச்சவுடனே எங்கட வீடுகளுக்குள்ளே வரப்பாக்குதுகள். என்ரை வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்க விடுவனே... என்ன தந்திரமாக அதுகளைக் கடத்தி விட்டேன் பாத்தியோ!” - (பொய்முகங்கள்)