நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

செவ்வாய், டிசம்பர் 04, 2012

சோல்ஜர் @ சொறிநாய்


சொறிநாயைப் பிடித்து
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து
கறியோடு சோறும்
வெறியேற அபினும்
குழைத்துண்ணக் கொடுத்து
வடக்கே போ என்றான்
வேட்டைக்கு

காவாலி சோல்ஜர்
கடைசித் தெருதாண்டி
முக்கி முணகி
மோப்பம் பிடித்தபடி
கால்தூக்கி
எல்லை வரைகின்றான்
என் வீட்டுச் சுவரில்

அடித்து விரட்ட
ஆளில்லா வீடொன்றில்
நாநீட்ட
தாகம் தணித்தவளின்
கைநக்கி
கோரைப்பல் தெரியச்
சிரித்தான்

வேட்டை நாயில்லா
வீடொன்றாய்ப் பார்த்து
கோழி இரண்டையும் -தென்னங்
குலை நான்கையும்
தேசியச் சொத்தாக்கினான்

சிதறுண்ட கால்கொண்ட
சிறுபுலியின் கதவுடைத்து
பெண்மையை அரசுடைமையாக்கினான்

காலம் பொறுமையாய்
காத்திருக்கிறது
காலம் வருவதற்காய்

திங்கள், நவம்பர் 26, 2012

முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”


முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”
                                                                                    -- மன்னார் அமுதன்


தோழர் முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார்.  சுரேஷ்குமார் தன் கவிப்பயணத்தைக் காலம் காலமாய்க் கவிதைகள் போற்றும் காதலைத் தொட்டுத் தொடங்குகின்றார். தன்னை ஆட்கொண்ட ஒரு தேவைதயைப் பற்றி சிறிதும் பெரிதுமாய் ஒன்றைத் தலைப்பின் கீழ் பாடியுள்ளர். காலம் தோறும் பருவம் மாறாது பூக்கும் பூ காதல். அது காய்த்தும் பின் கனிந்தும் பல தனிமரங்களை பெருந்தோப்பாக்கி விடுகிறது.

நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. பொருளாதாரத் தேடலில் குடும்ப உறவுகளையே தொலைத்து நிற்கும் தோழர்களுக்கு மத்தியில் உற்ற துணைக்கு முன்னுரிமை அளித்து காதல் கவிதைகளை வார்த்துள்ளார் கவிஞர்.  பெரும்பாலான எழுத்தாளர்கள் முதலில் எழுதத் தொடங்குவது கவிதையைத் தான்... காதலைத் தான்... காலம் போற்றும் காதலைக் கருவாய்க் கொண்டு “அழகிய இராட்சசி” எனும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது. 

ஒருவரின் மீது வைத்திருக்கும் காதலை எழுத்தின் மூலமோ, வார்த்தைகளின் மூலமோ கூறிவிட வேண்டும். இதயங்களுக்கிடையே பகிரப்படாத எத்தனையோ காதல்கள் இன்றும் ஏக்கப் பெருமூச்சுகளோடே சுற்றித் திரிகின்றன. பகிரப்படாத அன்பு பெறுமதியற்றதாகி விடுகின்றது. ஒருவரை எவ்வளவு நேசிக்கின்றோம் என்பதை அடிக்கடி செயல்களின் மூலம் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு உணர்த்தப் பிரயத்தனப்படும், ஒரு பகிரப்பட்ட ஒரு காதலின் தொகுப்பாகவே கவிஞர் சுரேஷ்குமாரின் அழகிய இராட்சசியை நான் பார்க்கிறேன்.

மிக எளிய நடையில், அனைவருக்கும் விளங்கும் வகையில் ““சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என்ற பாரதியின் வாக்கிக்கேற்ப கவிதைகளைப் படைத்துள்ளார் சுரேஷ்குமார். 

“கவிதை என்பது உணர்ச்சியின் உதிரப் பெருக்கு. தன்னுள் பெருக்கெடுத்த உணர்வுகளைத், தான் நன்றாக அனுபவித்து, அதனை உட்கொண்டு பிரசவிப்பவன் தான் கவிஞன். கவிதை என்பதுஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தச் சிதறல்கள். சலனமற்ற நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சிகளின் கொப்பளிப்புகள்” என்பான் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த். சுரேஷ்குமாரின் உள்ளத்து உணர்வுகள் கவிதையாக இந்நூலில் உருவெடுத்துள்ளது. யதார்த்தமான உவமைகளைக் கையாண்டு கவிதைகளுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார். நான் ரசித்த அவருடைய கவிதைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.


“அரிசி மண்ணெண்ணெய் 
வாங்க வரிசையில்
முண்டியடிக்கும் ஜனங்களைப் போலவே
முண்டியடித்து நிற்கின்றன
என் கனவுகள்”

‘கண்ணாடியைப் பார்த்து 
உன்னழகை சரிசெய்து கொள்கிறாய்
அனைவரும்
உன்னைப் பார்த்து
தங்களின் அழகை
சரிசெய்து கொள்கின்றனர்”

அழகு என்பது எங்கு உள்ளது என்பது இன்றுவரை சர்ச்சைக்குரிய கேள்வியாகவே உள்ளது. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது என்பதை நாம் அறிந்திருந்தாலும், மற்றொருவர் பார்த்து தம்மைத் திருத்திக் கொள்ளும் வகையில்

‘என் கன்னக்குழிகளில் 
ஊற்றி வைத்திருக்கின்றேன்
நீ கொடுத்த முத்தத்தின்
ஈரத்தை”

தேநீர் அருந்திய
கோப்பையை எறிந்துவிடாதே
இதழ்கள் பட்ட 
கோப்பையின்
ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம் காதல்


காதலில் வென்றவர்கள் சாதனை படைக்கிறார்கள். காதலில் தோற்றவர்கள் சரித்திரம் படைக்கிறார்கள் என்பார்கள். காதல் எவரையும் வீழ விடுவதில்லை. பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயத்தில் அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை நினைவு படுத்துவதற்காக வெளியிடப்படும் இந்நூலோடு, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு இன்னும் பல நூல்களைப் படைத்து கவியுலகில் அழியாத சுவடுகளை கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார் பதிக்க வேண்டுமெனெ மனமாற வாழ்த்துகின்றேன்.

#அழகிய ராட்சசி கவிதை நூலிற்கு எழுதிய முன்னுரையிலிருந்து 

புதன், நவம்பர் 14, 2012

தேவதைகளின் மொழி


பல்லிகளைக் காட்டி
 “ஊ.. ஊ..”

பறவைகளைக் காட்டி
 “கீ.. கீ.”

அடிக்கவோ
பிடிக்கவோ போனால்
 “அப்பா ஹூ ஹூ”

வாலாட்டி நாநீட்டி
விளையாடி மறைகின்றன
பல்லிகள்

நாளை வருமாறு
சொல்லி அனுப்புகிறாள்
பறவைகளை

தேவதைகளின் மொழியறிய
நாயைக் காட்டி
 “தோ... தோ...” என்றேன்

சிரித்து மறுத்து
  “நா....ய்..ய்” என்கிறாள்
திக்கித்திக்கி

புதன், நவம்பர் 07, 2012

மூத்த மகன்


நான்
யாராய் இருந்திருப்பேன்
அக்காவின் உலகில்


பொட்டிட்டும் பூவைத்தும்
அழகு பார்த்தவள்


தெருச்சண்டைகளில்
எனக்காய் வாதிட்டவள்


பாவாடை மடிப்புகளில்
எனைப் பாதுகாத்து
அப்பாவின் பிரம்படிகளை
அவளே வாங்கியவள்


பந்திகளில் முந்தி
எனக்காய்
பலகாரம் சேமித்தவள்


கட்டிக் கொள்பவனை
எனக்கும் பிடிக்கவேண்டுமென
மீசை வைக்கச் சொன்னவள்


அவள் உலகில்
யார் யாராகவோ
நான்


யாருடைய உலகிலும்
தம்பியாக முடியாமல்
மூத்த மகன்

-- மன்னார் அமுதன்

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்


காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்

கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்

கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது

கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை

ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை

தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை

வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்

வெள்ளி, ஜனவரி 13, 2012

தைப்பொங்கல் - சிறுவர் பாடல்


தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக

காணியிலே வைத்த பயிர்
காளையாக நிமிர - பொலிக்
காளையாக நிமிர
காடு கரை வீடு எல்லாம்
கதிரவனால் ஒளிர

கரையுடைத்து ஓடும் வெள்ளம்
அணைகளிலே மூழ்க - பெரு
அணைகளிலே மூழ்க
கவலைகளை மறந்து மக்கள்
களிப்பினிலே மூழ்க

வரப்புயர நெல்லுயரும்
வட்டிக் கடன் குறையும்
வட்டிக் கடன் குறையும்
வாழ வந்த பெண்களுக்கு
தங்கம் கழுத்தில் நிறையும்

கரும்பின் அடி இனிப்பு போல
காதல் வாழ்வில் மகிழ -மக்கள்
காதல் வாழ்வில் மகிழ
பசி பிணி பட்டினிகள்
சாதல் கண்டு மகிழ

பொங்க வேண்டும் இன்பமெலாம்
பசுவைக் கண்ட கன்றாய் - தாய்ப்
பசுவைக் கண்ட கன்றாய்
மங்க வேண்டும் துன்பமெல்லாம்
மாரி கண்ட கன்றாய்

தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக

வியாழன், ஜனவரி 12, 2012

அன்றும் இன்றும் என்றும் - பொங்கல் (சிறப்புக் கவியரங்கக் கவிதை)



வசந்தம் தொலைக்காட்சியில் 2012-01-15 ஆம் திகதி ஒளிபரப்பப்பட உள்ள பொங்கல் சிறப்புக் கவியரங்கம் - கவிபாடுவோர் தமிழ்மணி அகளங்கன்(தலைமை), வதிரி சி.ரவீந்திரன், கிண்ணியா அமீர் அலி, மன்னார் அமுதன்
---


கண்ணிரண்டும் காதிரண்டும் கொண்டவ னாயல்லாமல்
பண்ணிரண்டு படைக்கும் ஆற்றலோடு எனைவகுத்த
கண்ணாலோ காதாலோ கண்டறியா கர்த்தாவே
என்நாவில் வந்தமர் வாய். 

ஆன்ற பெருங்கவிஞர் அகளங்கன் தலைமையிலே
தோன்ற நான்செய்த பெரியதவம் யாதறியேன்
கூனோடும் குறையோடும் பிறக்குமென் கவிதையிலே
குறைகண்டால் பொறுத்தருள்வீர்

அன்று: 
மண்ணிலே கருவாகி 
மண்ணிலே உருவாகி
மண்ணிலே மாண்டவன் தான் உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்

வெள்ளாமை விளைகின்ற பூமி
விளைநிலமே உழவனுக்கு சாமி

பொன்னென்ற ஒரு வார்த்தை 
பொன்னைக் குறித்திடலாம்
மண்ணென்ற ஒரு வார்த்தை 
மண்ணைக் குறிப்பதில்லை

தோழர்களே
மண்ணென்ற ஒரு வார்த்தை 
மண்ணைக் குறிப்பதில்லை
அது நம் முன்னோரின் மானம்

மானம் காப்பதற்காய்
மறவர்கள் ஏரெடுத்து
வானம் பார்த்தே வரப்புயர்த்தி
வரண்ட நிலமெலாம் ஏருழுத்தி
ஒற்றை விதை விதைத்து
ஒரு கோடி நெல் அறுத்து
பத்துக் கரும்பெடுத்துப் பாகாக்கி 
பசுவின் பாலூற்றி 
ஆலாக்கு நெய்யூற்றி
ஆக்குவோம் பொங்கல் 

பொங்கலோ பொங்கலென்று
உழவர்கள் பாடுகையில்
பொங்குமே தைப்பொங்கல்
புலருமே தைத்திங்கள்

தமிழர் பட்ட துன்பமெல்லாம் மங்கட்டும்
தரணியிலே இன்ப வெள்ளம் பொங்கட்டும்

இன்று:
பொங்குக பொங்கலென்று
புலவர்கள் பாடிவிட்டால்
பொங்கிடுமோ... 
நான் பொங்கலைத் தான் பாடுகின்றேன்

பொங்குக பொங்கெலென்று
புலவர்கள் பாடிவிட்டால் 
பொங்கிடுமோ...
தமிழர் குடி பெற்ற துன்பம் 
மங்கிடுமோ
தரணியிலே இன்ப வெள்ளம்
தங்கிடுமோ

தரம் பிரித்து 
விதை விதைக்க காணியுமில்லை
தரிசு நிலம் 
கிழித்து உழ ஏருமேயில்லை
உருப் படியாய்
ஊரில் ஒரு காளையுமில்லை
உலைக்குப் போட 
உலக்கில் சிறு நெல்லுமேயில்லை

வீட்டிற்கு ஒருவர் 
விரைந்தோடிப் போய் நாட்டைக்
காக்கத் தேவையுமில்லை

நல்லதுதான் தோழர்களே
நாடென்றும் நிலமென்றும்
நமக்கெதற்கு

ஏதோ ஒரு மூலையிலே 
ஒடுங்கிக் கிடந்துவிட்டு
பசித்தால் பாண் தின்னும்
பரம்பரை நாம்

தீதோ நன்றோ 
ஏதும் அறியாமல்
ஏதோ ஒரு நாட்டில் உழுகின்றோம்

மண்ணும் நமதல்ல
மாடும் நமதல்ல -விளையும்
பொன்னும் நமதல்ல
பொருளும் நமதல்ல... உழுகின்றோம்

ஓயாமல் உழைத்துவிட்டு
சாய மடியின்றி
எங்கோ ஒரு மூலையிலே
சாகின்றோம்

நாமில்லா நாடா - தனியாக
நாடென்றும் நிலமென்றும் 
நமக்கெதற்குத் தோழர்களே

என்றும்:
நமக்கெதுவும் வேண்டாம் தான்
நம் குடிக்கும் வேண்டாமா
என்றும் ஏர் பூட்டியுழ 
சாதி சனம் கூடியழ
நமக்கெதுவும் வேண்டாம் தான் 
நம் குடிக்கும் வேண்டாமா

மண்ணிலே கருவாகி 
மண்ணிலே உருவாகி
மண்ணையே ஆண்டவனே உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்

விளைநிலங்கள் செழிக்காது
சூரியன் இன்றி
உழைத்துக் களைத்து உழவனுக்கு
சொல்லுவோம் நன்றி

நன்றி சொல்ல நாமும் இன்று 
பொங்க வேண்டுமே
நாளை ஒரு நாள் மலரும்
பொங்க வேண்டுமே

பொங்கட்டும் இன்பம்
பொங்கலைப் போலினிமேல்
மங்கட்டும் நாம் பட்ட துன்பமெலாம்
தங்கட்டும் இன்பம் தரணியெல்லாம்

===================