நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2
mannar amuthan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mannar amuthan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 14, 2012

தேவதைகளின் மொழி


பல்லிகளைக் காட்டி
 “ஊ.. ஊ..”

பறவைகளைக் காட்டி
 “கீ.. கீ.”

அடிக்கவோ
பிடிக்கவோ போனால்
 “அப்பா ஹூ ஹூ”

வாலாட்டி நாநீட்டி
விளையாடி மறைகின்றன
பல்லிகள்

நாளை வருமாறு
சொல்லி அனுப்புகிறாள்
பறவைகளை

தேவதைகளின் மொழியறிய
நாயைக் காட்டி
 “தோ... தோ...” என்றேன்

சிரித்து மறுத்து
  “நா....ய்..ய்” என்கிறாள்
திக்கித்திக்கி

வெள்ளி, டிசம்பர் 09, 2011

புறக்கணிப்பு

என்னைப் புறக்கணித்துச் சென்றவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவர்களை வாழ்க்கை புறக்கணித்திருக்கிறது.-- மன்னார் அமுதன்

======================================================

     

இருண்டே 
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை 


வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும்
கை பத்தா சம்பளமும்
கால்நீட்டத் 
தலைமுட்டும் வீடென்றும்


எத்தனையெத்தனை
காத்திருப்பும், கைகழுவலும்


நாய் நா வடியும்
கோடையாய்
வறண்டிருந்தது வாழ்க்கை


எல்லாமுமற்று நிற்கையில்
உன்னைக் கொண்டு
என்னைப் போர்த்தினாய்


புறக்கணித்துக் கடந்தவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
வாழ்க்கையின் புறக்கணிப்பால்

வெள்ளி, மே 20, 2011

நீயில்லாத பயணங்களில்


நீயில்லாத பயணங்களில்
கடும் குளிரால்
விறைத்துப் போகின்றேன்

சோதனைச் சாவடிகளில்
நிறுத்தப்படும் பேருந்தில்
எரிச்சலுடன் நடத்தப்படுகிறது
வெடிகுண்டுச் சோதனைகள்

பயத்துடன்
நடுநிசியில் இறங்கி
இருளில் தள்ளாடி
பொதியைச் சுமந்தபடி
இடித்து, இலக்கின்றி
நான் நகர்ந்து செல்கையில்…

தனிமைப் பயணமே உத்தமம்
குளிரின் கொடுமையை விட…

நீயில்லாத பயணங்களில்


நீயில்லாத பயணங்களில்
முழு இருக்கையில்
முக்கால் இருக்கையை
எவனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான்

எவனையோ
அலைபேசியில் அழைத்து
ஆரிப் நல்லவனென
நற்சான்றழிக்கிறான்

இரால் வடையையும்
இஞ்சிக் கோப்பியையும்
சத்தம் கேட்குமாறு
சப்பித் தின்றுவிட்டு

உன்னைச் சுமந்த
என் தோள்களில்
தூங்கிப் போகிறான்

பேய்க்கனவு கண்டதாய்
திடுக்கிட்டு
கடை வாய் எச்சியை
என்னில் துடைத்துக்கொண்டே
மீண்டும் அலைபேசுகிறான்

யாரோ ஒருத்தியையும்
அவள் தாயையும்
தமக்கையையும்
வார்த்தைகளால் கற்பழிக்கிறான்

எதுவுமே உறைக்காமல்
உனக்குப் பிடித்த
சாளரக் கம்பிகளில்
முகம் புதைக்கிறேன்

என்னைப் போலவே
உணர்வற்று
பள்ளம், மேடுகளில்
ஊர்கிறது பேருந்து

வெள்ளி, அக்டோபர் 29, 2010

“தமிழ் செம்மொழி விழா -2010” – கவியரங்கக் கவிதை


தமிழ் செம்மொழி விழா – 2010 மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டு 22,23,24,25 /10/2010 ஆகிய தினங்களில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இயல், இசை, நாடக விழாக்களும் மற்றும் பல ஆய்வரங்குககளும் சிறப்பாக நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இத்தமிழ் நிகழ்விற்கு இலங்கை தேசிய ஊடகங்கள் அனைத்தும் தமது பங்களிப்பை நல்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது வரை வட மாகாண இலக்கிய விழாக்களை மன்னார் மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இரண்டு முறை முன்னெடுக்கப் பட்ட போதும், சில அரசியல் தலையீடுகளால் இந்நிகழ்வுகள் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டன.

முற்று முழுதான மன்னார் மக்களின் பங்களிப்புகளோடு நடைபெற்ற இத்தமிழ் நிகழ்வினால் மன்னார் மக்கள் மிகுந்த மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகின்றனர்.

உலகத் தமிழ் மாநாட்டை ஆரம்பித்து வைத்த அருட்பணியாளர்தனிநாயகம் அடிகளாரின் வழியினைப் பின்பற்றி தமிழ் வளர்ச்சியில் தன்னை அர்பணித்துள்ளதாக மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்பனியாளர் தமிழ்நேசன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வு ஒரு கூட்டு முயற்சி என்றும், தமது மேலான பங்களிப்பை நல்கிய மன்னார் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

கவிஞரும், நாவலாசிரியருமான அகளங்கன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் எனக்கும் பங்கு பற்றும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “ஆதலினால் தமிழ் மேல் காதல் கொள்வீர்” எனும் கவியரங்கத் தலைப்பில், நான் முன்மொழிந்த எனது கவிதையை இங்கு காணலாம்.

கவிதையின் காணொளி: