நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

திங்கள், மார்ச் 11, 2013

இராத்தங்காத ஓர் இரவு



ஏழை குழந்தைக்கு
உணவு

எதிர்வீட்டு கிழவிக்கு
இளைப்பென

எதுவந்தாலும்
எங்கேனும் சுற்றி
இறுதியில் வருவது
அவளிடம் தான்

ஊரே உலகமாயிற்று
அவளுக்கு
உலகமே அவளாயிற்று
ஊருக்கு

எது எப்படியாயினும்
எல்லோர் வீட்டிலும்
பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்

அவள் இராத்தங்காத
அந்த ஒரிரவைப் பற்றி மட்டும்
                  -- மன்னார் அமுதன்

வியாழன், பிப்ரவரி 28, 2013

நல்லுமரமும் ராசாதிண்ணையும்


பாட்டையா ஒரு
விதை விதைத்தார்
மந்தையில்

ஆலவிதையாயினும்
நல்லு மரமாய் வளர்ந்தது
பாட்டையாவின் பெயரோடு

ஊரார் ஓய்வெடுக்கவும்
ஒன்றுகூடவும்
உதவியது நல்லுமரம்

விழுதுதுகள் எழுகையில்
வயோதிபர்களின்
வேடந்தாங்கலாகியிருந்தது
அப்பா அதைச் சுற்றி
திண்ணை கட்டினார்

ஆடுபுலி ஆட
ஏதுவாயிருந்தது
ராசாதிண்ணை

ஆல் வேரற்றிருக்கையில்
நாகரிகம் அறிந்திருந்தேன்
நல்லுமரத்தை
விழுதுகள் தாங்கிக்கொண்டன

பாட்டையாயும் அப்பாவும்
பாரமாயிப் போயினர்
எனக்கு

இப்போதெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
                  --மன்னார் அமுதன்





வெள்ளி, பிப்ரவரி 22, 2013

பேயோன்


தலைவலியோடு எழும்போதே
பேயைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தான்

கண்கள் சிவத்தும்
நரம்புகள் புடைத்தும்
அரற்றித் திரிந்திருக்கிறது பேய்

பேயடித்ததால்
வீங்கிக் கிடக்கிறது
சோற்றுப் பானையும்
மனைவியின் முகமும்

ஆறொன்று
ஓடி மறைந்த வடுவாய்
காய்ந்திருந்தது
பேய் கழித்த சிறுநீர்

வெட்டியெடுத்த மண்போட்டு
மறைக்கப்பட்டிருந்தது
அதன் வாந்தி

வந்ததற்கான
எல்லா அடையாளங்களையும்
விட்டே சென்றிருந்தது பேய்

அலங்கார அறையொன்றில்
பேயைக் காட்டுவதாய்
அழைத்தான்

அங்கு பேயுடைத்த
கண்ணாடிச் சில்லுகளில்
ஆயிரமாயிரமாய்த் தெறித்துக்கிடந்தது
எனது முகம்

  -- மன்னார் அமுதன்

வெள்ளி, பிப்ரவரி 15, 2013

அழுக்குக் குறிப்புகள்

(ழுக்)குக் குறிப்புகள்

கிழிசல் உடைகள்
வெட்டாத நகங்கள்
மூக்கு முடிகளென
எங்கும் அழுக்கு

பெருவிருட்சத்தின் 
விழுதுகளாய்
தொங்கிக் கிடக்கிறது 
சடையும் தாடியும்

வெட்டப்பட்ட விரல்கள்
சீழ் வடியும் புண்களென
நெளிந்து கிடக்கிறது
அவன் அன்றாடம்

குடலைக் குமட்டும்
அழுக்குகளின் 
திரட்சியாய் அவன்..

விலகிக் 
கடந்து செல்கையில்
அழுக்காகி விடுகிறது மனசு

காவிப்பல் தெரிய 
நட்பாய் சிரிக்கையில் 
அழகாகிவிடுகிறான் அவன்...
           
                -- மன்னார் அமுதன்

புதன், பிப்ரவரி 06, 2013

தந்தையாயிருத்தல்


அவருக்கும் எனக்குமான
உறவுச் சுவரில்
வேர் பரப்பியிருந்தது
விரிசல்

ஒரு முறையேனும்
முறை சொல்லி
அழைத்ததாய் நினைவில்லை
கடந்த காலங்களில்

மீசை அரும்பாதவரை
கக்கத்தில் முகம்
புதைத்துக் கிடந்ததைச்
சொல்கிறாள் அம்மா

எனது
வெற்றிகளுக்காக
தோல்விகளைத் தோளில்
சுமந்தவனென்கிறாள்
பாட்டி

என்
மதிப்பெண்களை
கல்லூரிகளுக்கு
காவித் திரிந்ததில்
அவரின்
கால் செருப்பு அறுந்த
கதை சொல்கிறாள் தங்கை

சேக்காளிகளோடு
சண்டைபிடித்து
மண்டையுடைந்து வந்தபோது
மருந்திட்டதை ஞாபகப்படுத்துகிறான்
தம்பி

புறக்கணிப்பின்
எல்லாக் கணங்களிலும்
அவர் தந்தையாய் இருந்தார்

நான்தான்
கயிறை அறுக்கும்
கன்றுக்குட்டியாய்..
                 -- மன்னார் அமுதன்

செவ்வாய், ஜனவரி 29, 2013

கோயிலும் கடவுளும்


அந்நாட்களில்
ஏழைகளின் 
கூடாரமாயிருந்தது
கோயில்

கடவுள்
காவலாயிருந்தார்
கதிரவனாய் ஒளிர்ந்தது
கடவுளின் முகம்

அப்பாவும்
அப்பாவின் அப்பாவும்
அவரின் அப்பாவும்
அவரின் சமூகம் கூட
அவ்வாறே இருந்தார்கள்

நடிப்புச் சுதேசிகளாய்
நாங்கள் வளர்ந்தபோது
காலத்தால் இடிந்திருந்தது
கோவில்

கடவுள் அங்கேயே 
காவலாயிருந்தார்

தன்னை
நியாயப்படுத்த
எல்லாவற்றையும்
கற்றுத் தந்திருந்தது மதம்

மேலானவர்களைத் துதித்தோம்
கீழானவர்களைத் துவம்சித்தோம்
தோற்றம் மாறியிருந்தார்
கடவுள்

தூண்களைக் கட்டியும்
தூசிகள் தட்டியும்
பாரம்பரியக் கோவிலைப்
பராமரித்தோம்
மழைக்கு ஒதுங்கிய 
மக்களையும்
மஞ்சள் படிந்த 
கடவுளையும் வெளியேற்றிவிட்டு

   -- மன்னார் அமுதன்

வியாழன், ஜனவரி 24, 2013

நானற்ற பொழுதுகளில்


நீ
முட்டியை மடக்கி
முகத்தில் குத்தியதில்
முத்திரை குத்தப்பட்ட
கடிதத்தைப் போலவே
கிழிந்து போயிருந்தது
என் தாடை

மருந்திடச் சொல்கிறாய்
முட்டிக்கு

பெண்ணென்றான பின்
பெரிதாய் என்ன செய்திடுவாய்
எல்லா இராணுவங்களும்
செய்ததைவிட

அடுப்படியில் கூட
எனக்கான
கருத்தோ கொள்கையோ
கருக்ககட்டக் கூடாதெனும்
கொள்கையோடே வாழ்கிறாய்

விதிமுறைகளை
என்னிடமும்
விதிவிலக்குகளை
எல்லோரிடமும்
பேசுபவனே

எழுதி முடிக்கப்பட்ட
கவிதையிலிருந்து
தூக்கி வீசப்பட்ட
சொற்களைப் போலவே
நிராகரிக்கப்பட்டிருப்பாய்
நானற்ற பொழுதுகளில்

செவ்வாய், ஜனவரி 22, 2013

தேவதைகளின் தனிமை


நீயென்னைத் 
தனித்திருந்த
நாட்கள் நான்கும்
நரகங்களாகிப் போயின

பார்க்கும் பொம்மைகளில் 
கூட நிழலாடியது
உன் முகம் 

அதிகாலை அணைப்பும்
முத்தமும் சிணுங்கலும்
எதுவுமற்று விடிந்திருந்தது
வாழ்க்கை

உன்னை வந்தடைந்த
ஐந்தாம் நாள் காலையில்
ஊர்க்குருவிகளோடும்
ஓட்டுப்பல்லிகளோடும்
தோட்டத்துப் பூக்களோடும்
பேசிக்கொண்டிருந்தாய்

மனிதர்கள் அற்ற
தனிமைப் பெருவெளியில்
நீ
மகிழ்ச்சியோடு
மட்டுமேயிருந்தாய்

கண்டவுடன்
பொம்மைகளைப் புறமொதுக்கி
கட்டிக்கொண்டாய்

அக்கணத்தில் 
அர்த்தப்படுத்தியிருந்தாய்
என் 
வாழ்க்கையையும்
தனிமையையும்

திங்கள், ஜனவரி 21, 2013

யுத்தசாட்சி - 1


மும்முறை வீழ்ந்த
என்னிறைவா
நானும் பாரம்சுமக்கின்றேன்
நீர் தாகமாயிருந்தீர்
நானோ பசித்திருக்கின்றேன்

யாருக்கெதிரான போரிலும்
முதலில் தோற்கடிக்கப்படுவது
நாங்கள் தானே

எப்படியிருக்கிறாயென
எவரும் கேட்பதில்லை
எத்தனை முறையென்றே
கேட்கிறார்கள்

உடல் கிழிந்து
உயிர் கருகிய நாட்கள்
எத்தனை என்று
தெரியவில்லை

முள்முடிகள் குத்தியதில்
முட்டிக்கால் தாண்டியும்
ஓடிக்கிடக்கிறது இரத்தம்
எத்தனை பேரென்று
எண்ணவில்லை

காடையர்கள் 
பகிர்ந்துண்ட
கடைசி அப்பத்தைப் போல்
நானும் சிதறிக்கிடக்கிறேன்
எத்தனை முறையென்றும்
நினைவிலில்லை 

கிழிசல் வஸ்திரங்களைக் கீழிறக்கி 
மீண்டும் மேலேறுபவனை உதறித்தள்ளி 
காத்திருப்போரிடம் கேட்கிறேன்
“உணவுப் பொதிகளை 
வைத்திருப்போரே 
உங்களில் பாக்கியவான்கள்.
அவர்களுக்கு 
நான் சித்தமாயிருக்கிறேன்”

ஞாயிறு, ஜனவரி 20, 2013

கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்



கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்

என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.

அவனும் நானும்
ஆணாகவே இருந்தோம்
இருந்தும்
அவன் மேன்மையானவனானான்

திருடனென்றாலும்
உமக்கு
வலப்பக்கம் வீற்றிருக்கும்
திருடனாய்
அவன் மேன்மையானவனானான்

கடைச்சரக்கா இலக்கியமென
காணுமிடமெலாம்
பேசித் திளைப்பதில்
அவன் மேன்மையானவனானான்

எனது வாயை
மிதித்தபடி
அவன் பேசிய
சுதந்திரமும் பிறப்புரிமையும்
கேட்டவர்கள் கூட
சொன்னார்கள்
அவன் மேன்மையானவனென

கலாச்சார உடையில்
வெள்ளையும் கறுப்புமான
மேன்மையானவனே

தயக்கம் வேண்டாம்
சேலையும் கலாச்சார உடைதான்
ஒருமுறை அணிந்துபார்
அழகாய்த்தானிருக்கும்

கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்

என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.