நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2
காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 09, 2011

புறக்கணிப்பு

என்னைப் புறக்கணித்துச் சென்றவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவர்களை வாழ்க்கை புறக்கணித்திருக்கிறது.-- மன்னார் அமுதன்

======================================================

     

இருண்டே 
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை 


வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும்
கை பத்தா சம்பளமும்
கால்நீட்டத் 
தலைமுட்டும் வீடென்றும்


எத்தனையெத்தனை
காத்திருப்பும், கைகழுவலும்


நாய் நா வடியும்
கோடையாய்
வறண்டிருந்தது வாழ்க்கை


எல்லாமுமற்று நிற்கையில்
உன்னைக் கொண்டு
என்னைப் போர்த்தினாய்


புறக்கணித்துக் கடந்தவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
வாழ்க்கையின் புறக்கணிப்பால்

புதன், செப்டம்பர் 28, 2011

நெஞ்சிற்கு நீதி



கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று - பணம்
காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு - என
நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த
நீதிமான்களைக் காலம் வெல்லும்

கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும்
கீழான மனிதர்தம் பாதம் தொட்டு - நல்ல
மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள்
நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும்

பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல
பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு
கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த
நீரினில் ஒருபுறம் நீதி தவழும்

# கொழும்பு சட்ட மாணவர் தமிழ் மன்றம் -2011 வெளியிட்ட நீதிமுரசிற்காக எழுதிய கவிதை

திங்கள், ஜூலை 18, 2011

அந்த ஒருவன்...


உன்னைப் போலவே தான்
நானும் பிரமிக்கின்றேன்

எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ என்னுள்
நுழைந்திருந்தாய்

இனிதாய் நகர்ந்தவென்
பொழுதுகளில் -உன்
ஒற்றைத் தலைவலியையும்
இணைத்துக் கொண்டாய்

பழகியதைப் போலவே
ஏதோ ஒரு நொடியில்
பிரிந்தும் சென்றாய்

ஏன் பழகினாய்
ஏன் பிரிந்தாய்
எதுவுமறியாமல்
அலைந்த நாட்களில் தான்
மீண்டும் வருகிறாய்
மற்றொரு காதல் மடலோடு

எப்படி ஏற்றுக் கொள்ள...
நானலைந்த தெருக்களில்
காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய்
மற்றொருவனையும்

.

புதன், ஜூன் 01, 2011

மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்



கண்டேன் அவளைக்
கடற்கரை அருகே

நின்றேன் ஒரு கணம்
நினைவுகள் இழந்து

சென்றேன் அந்தச்
செம்மொழி அருகில்

வந்தனம் என்றேன்
வாய்மொழி இல்லை

கண்டும் காணாமல்
நிற்காமல் செல்லுமிவள்
நிலவின் மகளோ

நீண்டதாய்ச் சொல்தொடுத்தும்
தீண்டாமல் செல்கிறாளே
நீரின் உறவோ

தொடர்ந்தேன் பின்னால்
தொழுதேன் கண்ணால்

அமர்ந்தேன் அந்த
அமிர்தம் அருகில்

**

தாயின் கையைத்
தட்டி எழுந்தவள்
தாமரைப் பூக்களாய்
வெட்டி மலர்ந்தாள்

“போதும் போதும்”
போகலாம் என்ற
அன்னையை முறைத்து
அருகினில் வந்தாள்

போறோம் நாங்க
நீங்களும் போங்க

இதழ்கள் பிரித்து
இருவரி உதிர்த்து
அரிவரிச் சிறுமியாய்
மறைந்தவள் போனாள்

***

சிந்தையை விட்டுச்
சிதற மறுக்கும்
மங்கையைக் கண்டு
மாதங்கள் இரண்டு

மறுபடி அவளைக்
காணும் நாள் வரை
மனதினை வதைக்கும்
கனவுகள் திரண்டு

***

தேய்பிறையோ,
வளர்பிறையோ
தெரியாத நிலவு அவள்

அடைமழையோ
இடி புயலோ
அறியாத அல்லி அவள்

***

புன்னகையின் தேவதையாய்
பூமியிலே பிறந்தவளே
என்னபிழை நான் செய்தேன்
ஏனென்னை வெறுக்கின்றாய்

காணாமல் நானிருந்தால்
கணமொன்றில் இறந்திடுவேன்
நோய்கொண்டு போகுமுன்னே
நானுன்னைக் காண வேண்டும்

***

என்
பாசமுள்ள பூமகளே

வாசலிலே கண்டவுடன்
வாங்கப்பா என்காமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்டு
அம்மா அம்மாவென
அரற்றி அழுதவளே

அச்சம் வேண்டாம்

பிச்சைக்காரனோ
பிள்ளை பிடிப்பவனோ
அச்சம் அறியாத – இளம்
ஆண்மகனோ நானில்லை

அப்பா…
நானுன் அப்பா

சீதனச் சீரழிவால்
சிதறிய நம் குடும்பம்
சீதேவி உன்னாலே
சீராக வரம் வேண்டும்

வாசலிலே கண்டவுடன்
வாங்க என்று சொல்லாமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்ட
என்
செல்ல மகளே -உன்னைச்
சீராட்ட வரம் வேண்டும்

================
கவிதையின் ஒலிப்பதிவு: இங்கே
==================

குறிப்பு:

மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதல் லெப்பை அவர்களை நினைவுறுத்தும் முகமாக சக்தி பண்பலையில் இடம்பெற்ற கவிராத்திரி நிகழ்விற்காக “மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்” என கொடுக்கப்பட்ட தலைப்பிற்காக எழுதப்பட்ட கவிதை… இக்கவி வரிகள் கவிஞர் அப்துல் காதர் லெப்பை 1967 இல் வெளியிட்ட “செய்நம்பு நாச்சியார் மாண்மியம்” எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், மே 31, 2011

நேயம்



தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

நன்றி:
#கீற்று

திங்கள், மே 30, 2011

பிச்சை



பிச்சைக்காரர்களுக்கோ
போர்
இடப்பெயர்வு
ஊனம்
இயலாமை
கந்தலுடை மனைவி
பசியோடிருக்கும் மகன்
பருவமெய்திய ஏழாவது மகளென
ஆயிரம் காரணங்கள்
பிச்சையெடுக்க

நடத்துநர்களுக்கோ
ஒன்றே ஒன்று தான்
“சில்லறையில்லை”

கற்பிழந்த கதை


விடுமுறையில் கூட

வேலைக்குச் சென்றாய்…

உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்


அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்


காலம் தாழ்த்தி
வீடு வந்து கோயிலென்றாய்


கண்டிக்கும் போதெல்லாம்
யாரோ அண்ணண்களோடு
ஒப்பிட்டாய்


ஆண்நட்பு, பெண்ணுரிமை
அத்தனையும் பேசிய நீ
அதையும் கூறிவிட்டல்லாவா
அணைந்திருக்க வேண்டும்


அதுதான்,
“நீ கற்பிழந்ததையும் – உன்
கடவுள் கைவிட்டதையும்”

செவ்வாய், மே 24, 2011

நான் படித்த அக்குரோணி


குறிப்பு: நான் படித்த அக்குரோணி  -- நன்றி கவித்தோழன் முகமட் பஸ்லி
கணிணியுகம் என்று வர்ணிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் என்னதான் எல்லாத்துறைகளும் கணிணிமயப்படுத்தப்பட்டு இயந்திரங்களின் துணைகொண்டு இயங்கிக் கொண்டிருந்தபோதிலும் மனிதனின் வேலைப்பளு குறைந்ததாகத் தெரியவில்லை. இன்று இயந்திரங்களிலும் வேகமாக மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்றே சொல்லவேண்டும். இவ்வாறு உலகின் சுழற்ச்சிக்கேற்ப முழு முயற்சியுடன் ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் மனதுக்கு நல்ல ஓய்வும் தேவைப்படுகிறது. சிறந்த ஓய்வு கிடைக்கும்போதே மறுநாள் அவனால் புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை ஆரம்பிக்க முடியும். இதனால்தான் மனிதன் பெரிதும் அமைதியை நாடுகிறான். மன அமைதியைப் பெறுவதற்காக அவன் எத்தனையோ முயற்சிகளை எடுக்கிறான், எங்கெங்கெல்லாமோ செல்கிறான். இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, ஆசை, பொறாமை இப்படி பலவகை அம்சங்களினால் கனத்து நிறம்பும் மனதுக்கு கவிதைகள் நல்ல ஆறுதலை வழங்குகின்றன என்று சொல்லப்படுகின்றது. இது உண்மை என்றே நான் கருதுகிறேன். இந்த ஆறுதல் எனக்கும் பல சந்தர்ப்பங்களில் கிடைத்துள்ளது. அன்மையில் மன்னார் அமுதனின் அக்குரோனி கவிதைத் தொகுதியை வாசிக்கும் போது மீண்டும் ஒரு முறை இந்த உணர்வினை அனுபவிக்கக் கூடியதாயிருந்தது.


கவிதை என்றால் என்ன? என்பதில் மூத்த பெரும் கவிஞர்களிடத்திலேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் தமக்குரிய பாணியில் வித்தியாசமான விளக்கங்களைத் தருவது கொண்டு  கவிதைக்கு பொதுவான ஒரு வரைவிலக்கணம் இன்னும் வழங்கப்படவில்லை என்றே சொல்லலாம். எது எப்படியோ கவிதை என்னும் போது அதில் கட்டாயமாக கவிநயம் இருக்கவேண்டும் வெறுமனே வார்த்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டு போவதால் அது கவிதையாகிவிடாது. கவிதை காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் பல வடிவங்களால் தன்னை அழங்கரித்துக் கொள்கிறது. மரபு, புது, நவீனம், ஹைக்கூ என்று எந்த வடிவில் கவிதைகள் எழுதப்பட்டாலும் அதில் பொதிந்திருக்கும் கவித்துவ அழகினைப் பொறுத்தே அவை வாசகர் மனதில் இடம்பிடிக்கின்றன. சில கவிதைகளை சந்தங்கள் அழகுபடுத்துகின்றன.

மறுபக்கம் – பாலியல்


மதுவோடும் மாதோடும்
சூதாடும் மன்மதனின்
கதையெங்கும் காமம் தெறிக்கும்

பகலென்ன இரவென்ன
படுக்கைக்கு போய் விட்டால்
விரல் பத்தும் தேகம் கிழிக்கும்

நாடோடி போலாகி
தேடோடிப் பெண் சுகத்தை
எழுத்திலே கருக விடுவான்

கோடிட்டுக் கோடிட்டுக்
கோமானே அவனென்று
போற்றியவன் படித்துக் கெடுவான்

பாலியலின் பலபக்கம்
அறிந்தவனாய்ப் பகட்டுபவன்
நாளொன்றில் மணமுடிப்பான்

ஊசியிலே நுழையாத
நூலொன்றைக் காவியவன்
இல்லறத்தில் விரதமென்பான்

போருக்கு ஆகாத
வாளொன்றை அழகிடையில்
அணிதற்கு அவள் மறுப்பாள்

உலகினிலே பரத்தைகளை
உறவினிலே வென்றவனை
உற்றதுணை தோற்கடிப்பாள்

வெள்ளி, மே 20, 2011

நீயில்லாத பயணங்களில்


நீயில்லாத பயணங்களில்
கடும் குளிரால்
விறைத்துப் போகின்றேன்

சோதனைச் சாவடிகளில்
நிறுத்தப்படும் பேருந்தில்
எரிச்சலுடன் நடத்தப்படுகிறது
வெடிகுண்டுச் சோதனைகள்

பயத்துடன்
நடுநிசியில் இறங்கி
இருளில் தள்ளாடி
பொதியைச் சுமந்தபடி
இடித்து, இலக்கின்றி
நான் நகர்ந்து செல்கையில்…

தனிமைப் பயணமே உத்தமம்
குளிரின் கொடுமையை விட…

நீயில்லாத பயணங்களில்


நீயில்லாத பயணங்களில்
முழு இருக்கையில்
முக்கால் இருக்கையை
எவனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான்

எவனையோ
அலைபேசியில் அழைத்து
ஆரிப் நல்லவனென
நற்சான்றழிக்கிறான்

இரால் வடையையும்
இஞ்சிக் கோப்பியையும்
சத்தம் கேட்குமாறு
சப்பித் தின்றுவிட்டு

உன்னைச் சுமந்த
என் தோள்களில்
தூங்கிப் போகிறான்

பேய்க்கனவு கண்டதாய்
திடுக்கிட்டு
கடை வாய் எச்சியை
என்னில் துடைத்துக்கொண்டே
மீண்டும் அலைபேசுகிறான்

யாரோ ஒருத்தியையும்
அவள் தாயையும்
தமக்கையையும்
வார்த்தைகளால் கற்பழிக்கிறான்

எதுவுமே உறைக்காமல்
உனக்குப் பிடித்த
சாளரக் கம்பிகளில்
முகம் புதைக்கிறேன்

என்னைப் போலவே
உணர்வற்று
பள்ளம், மேடுகளில்
ஊர்கிறது பேருந்து

நீயற்ற தனிமைப் பயணத்தில்…


மலையகத்தின்
உறை குளிரில்

தோள்களில் சாய…
கைகளைப்
பிணைத்துச் சூடேற்றி…
தலைமுடி கோதி
காதருகே முடி சுழற்றி

காதலோடு
கழுத்தில் முத்தமிட…
எவரும் இங்கு தயாரில்லை

இடையிடையே
நாசி தொடும்
மண் மணத்தில்
உனை நினைக்க

நாம் உச்சரிக்க மறந்த
வார்த்தைகளை மட்டும்
பேசிக் கொண்டிருக்கிறது
நம் காதல்

வெள்ளி, அக்டோபர் 29, 2010

“தமிழ் செம்மொழி விழா -2010” – கவியரங்கக் கவிதை


தமிழ் செம்மொழி விழா – 2010 மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டு 22,23,24,25 /10/2010 ஆகிய தினங்களில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இயல், இசை, நாடக விழாக்களும் மற்றும் பல ஆய்வரங்குககளும் சிறப்பாக நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இத்தமிழ் நிகழ்விற்கு இலங்கை தேசிய ஊடகங்கள் அனைத்தும் தமது பங்களிப்பை நல்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது வரை வட மாகாண இலக்கிய விழாக்களை மன்னார் மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இரண்டு முறை முன்னெடுக்கப் பட்ட போதும், சில அரசியல் தலையீடுகளால் இந்நிகழ்வுகள் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டன.

முற்று முழுதான மன்னார் மக்களின் பங்களிப்புகளோடு நடைபெற்ற இத்தமிழ் நிகழ்வினால் மன்னார் மக்கள் மிகுந்த மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகின்றனர்.

உலகத் தமிழ் மாநாட்டை ஆரம்பித்து வைத்த அருட்பணியாளர்தனிநாயகம் அடிகளாரின் வழியினைப் பின்பற்றி தமிழ் வளர்ச்சியில் தன்னை அர்பணித்துள்ளதாக மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்பனியாளர் தமிழ்நேசன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வு ஒரு கூட்டு முயற்சி என்றும், தமது மேலான பங்களிப்பை நல்கிய மன்னார் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

கவிஞரும், நாவலாசிரியருமான அகளங்கன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் எனக்கும் பங்கு பற்றும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “ஆதலினால் தமிழ் மேல் காதல் கொள்வீர்” எனும் கவியரங்கத் தலைப்பில், நான் முன்மொழிந்த எனது கவிதையை இங்கு காணலாம்.

கவிதையின் காணொளி: