திங்கள், ஜூலை 18, 2011
அந்த ஒருவன்...
உன்னைப் போலவே தான்
நானும் பிரமிக்கின்றேன்
எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ என்னுள்
நுழைந்திருந்தாய்
இனிதாய் நகர்ந்தவென்
பொழுதுகளில் -உன்
ஒற்றைத் தலைவலியையும்
இணைத்துக் கொண்டாய்
பழகியதைப் போலவே
ஏதோ ஒரு நொடியில்
பிரிந்தும் சென்றாய்
ஏன் பழகினாய்
ஏன் பிரிந்தாய்
எதுவுமறியாமல்
அலைந்த நாட்களில் தான்
மீண்டும் வருகிறாய்
மற்றொரு காதல் மடலோடு
எப்படி ஏற்றுக் கொள்ள...
நானலைந்த தெருக்களில்
காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய்
மற்றொருவனையும்
.
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
செவ்வாய், ஜூலை 12, 2011
அருள் மா - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே
ஆண்டுகள் நாற்பதாய் அருள்மா புரிந்த
அரும்பணி உரைப்பது மன்றக் கடமை
ஆற்றிய பணியில் குறைநிறை அளந்து
குற்றம் பரப்புதல் சிலரது மடமை
அருள்மா அவர்கள் அணிந்தது வெண்மை
ஆடைகள் போலவே உள்ளமும் தும்பை
அடியவன் தோளிலும் அருள்மா கைகள்
ஆதரவாகத் தொட்டது உண்மை
வருவார் அமர்வார் வார்த்தைகள் மொழியார்
வாசலில் காண்கையில் புன்னகை மொழிவார்
இலக்கிய உரைகளை இயம்பி அமர்கையில்
இனிதிலு மினிது இயம்பிய தென்பார்
அருளின் கதைகள் எல்லாம் விதைகள்
கருப்பொருள் செறிவைக் கதைத்தனர் பலபேர்
கதைகளின் மாந்தர் கண்ணில் படுகையில்
விதைகளில் பலது விருட்சமாய் வளரும்
வற்றிய கிணற்றில் தவளைகள் போலே
வாடயிலே நீர் ஊற்றினீர் எம்மில்
பற்றிய பிடியைத் தளர விடாதே
வருவாய் விரைவாய், உயர்வாய் என்றீர்
தூற்றிப் பழகா போற்றும் குணத்தார்
ஆற்றிய பணிகள் அத்தனை அருமை
கற்றதை எல்லாம் கைமண் அளவாய்க்
கருதியே அருள்மா கதைத்தது அருமை
பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே
*இலக்கியவாதி அருள் மா.இராஜேந்திரனின் மறைவையொட்டிய கவிதை
*எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரன் பற்றிய மேலதிக தகவல்கள்: இங்கே
கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை நடாத்தும்
எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரன் - முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம்
மாதந்தோறும் நடைபெறும் கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் முழுமதி தின இலக்கியப் பாசறை நிகழ்வில் இம்முறை எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை நினைவு கூறுமுகமாக எதிர்வரும் 14.07.2011 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படுள்ளது.
டிலாசால் அருட்சகோதரர் பொனவெஞ்சர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் எழுத்தாளர் அருள்மா இராஜேந்திரன் ஆற்றிய இலக்கிய சேவைகள் மற்றும் மனிதாபிமானப் பணிகள் பற்றிய உரையை ஆசிரியர் தாசியிசஸ் அவர்களும், மன்னார் அமுதனும் ஆற்றவுள்ளனர்.
இலக்கிய ஆர்வலர்களையும், சக படைப்பாளிகளையும் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திங்கள், ஜூலை 04, 2011
பருவமெய்திய பின்
The greatest thing a father can do to his children, is to love their mother.
- Anjaneth Garcia Untalan
பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்
வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா
மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..
முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு
துக்கம் தாளாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா
யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா
இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை
லேபிள்கள்:
அப்பா,
கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)